மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
இலங்கை முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய மனித புதைகுழிகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துமாறு புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை இடதுசாரி கட்சியொன்று வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் நவ சமசமாஜக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய பிரியந்த விக்ரமசிங்க, செப்டெம்பர் 26ஆம் திகதி கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்தி, கடந்த காலங்களில் வடக்கிலும் தெற்கிலும் புதிய மனித புதைகுழிகள் கண்டறியப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோர்
அதில் “கடந்த காலம் முழுவதும் வடக்கிலும் தெற்கிலும் வெகுஜன புதைகுழிகள் கண்டறியப்பட்டதை நாம் அறிவோம். இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு இப்போது எங்கும் போராட்டங்கள் நடைபெறுவதையும் நாம் அறிவோம்.
தற்போது தென் மாகாணத்தில் மாத்தளை போன்ற பிரதேசங்களிலும் சூரிய கந்த போன்ற பிரதேசங்களிலும் பாரிய மனித குழிகள் கண்டறியப்பட்டன.
துறைமுக பிரதேசத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தில் அந்த கட்டிடத்தை அண்மித்து புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலை இல்லாத எலும்புகளும் கிடைத்துள்ளதால் இதை சாதாரண புதைகுழியாக கருத முடியாது.
52 பேரின் எச்சங்கள்
எனவே, இவை தொடர்பில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வன்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் ஜூன் 29, 2023 அன்று மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதை குழியிலிருந்து 52 பேரின் எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 2024 ஜூலை 15ஆம் திகதி மூடப்பட்டது.
மேலும், வடக்கில், பல பாரிய மனித புதைகுழிகள் கண்டறியப்பட்டன.
எனவே, இவை குறித்து உரிய விசாரணை நடத்தி, மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஆகவே அரசாங்கம் உடனடியாக தலையிட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான தீவிர கலந்துரையாடலுக்கு மத்தியில் மக்களுக்கு தெளிவான பதில் தேவை என்பதையும் தெளிவாக கூறுகின்றோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |