நாடு முழுவதும் எரிபொருள் நிலையங்களில் குவிக்கப்பட்ட பொலிஸார்! மக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்
இலங்கை அரசாங்கம் QR அடிப்படையிலான எரிபொருள் விநியோகத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த காரணத்தினால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் எரிபொருள் நிலையங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் ஒழுங்கை பராமரிக்கவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிலையங்களில் குவிக்கப்பட்ட பொலிஸார்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோக சிக்கல்கள் குறித்த அச்சம் காரணமாக பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக் கொள்ள விரைந்த காரணத்தினால் இவ்வாறு நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

QR குறியீடு அமைப்பு ஒவ்வொரு வாகன வகைக்கும் தேவையான அளவு எரிபொருளைப் பெறுவதை உறுதி செய்வதால் பொதுமக்கள் பீதி அடையக்கூடாது என்று போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புக்குப் பொறுப்பான டிஐஜி டிபிஜிஜே சேனதீரா தெரிவித்துள்ளார்.
பல வாகன சாரதிகள் தங்களுக்கு உண்மையில் தேவைப்படுவதை விட அதிக எரிபொருளைச் சேகரிக்க முயற்சிப்பதாகவும், இது எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகளையும் போக்குவரத்து நெரிசலையும் உருவாக்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
QR முறையில் எரிபொருள் விநியோகம்
QR குறியீடு அமைப்பு அதிகாரப்பூர்வமாக நேற்று(15) காலை 6 மணிக்குத் தொடங்கியதுடன், சாரதிகள் எரிபொருளை பெற QR குறியீட்டைக் காட்ட வேண்டும் என்றும் எரிசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த அமைப்பின் கீழ், பதுக்கலைத் தடுக்கவும் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யவும் ஒவ்வொரு வகை வாகனத்திற்கும் நிலையான வாராந்திர எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்திய நாட்களில் எரிபொருள் தேவை திடீரென அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றும், தேவையை நிர்வகிக்கவும், வரிசைகளைக் குறைக்கவும் மட்டுமே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
உலக நிலைமை சீராகும் வரை எரிபொருளை கவனமாகப் பயன்படுத்தவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.