தமிழ் ஊடகவியலாளர் மீதான அடக்குமுறை - அநுர அரசின் போலி முகம் அம்பலம்
தமிழ் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் மீதான ஊடக அடக்குமுறையை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிச்சத்திற்கு வரும் அரசின் போலி முகங்கள்
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
ஆட்சி அதிகாரங்கள் இல்லாத காலகட்டத்தில் தங்களை ஜனநாயகவாதிகள் போலவும் ஊடகங்களின் நண்பர்கள் போலவும் காட்டிக்கொண்ட தேசிய மக்கள் சக்தி, தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த கால அரசுகளை விட மிக மோசமாக ஊடகவியலாளர்கள் மீது அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் ஏவிவிட்டுள்ளது.

தங்களின் இயலாமை, ஊழல்கள் மற்றும் செயற்திறனற்ற தன்மைகளை ஊடகவியலாளர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுவதால், தங்கள் போலி முகங்கள் மக்களிடம் அம்பலப்பட்டுவிடும் என்ற அச்சத்திலே இந்த அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரச தரப்பு இந்த வன்முறைப் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும். வடக்கில் நீண்டகாலமாகச் சுயாதீனமாகச் செயற்பட்டு வரும் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன், கொள்கை ரீதியில் பிழைவிடும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு எதிராகக் கூட துணிந்து கருத்துக்களைப் பதிவு செய்தவர்.
அத்தகைய ஒரு சுதந்திரமான ஊடகவியலாளர் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசால் பழிவாங்கப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை
கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகப் போலியாகக் கண்ணீர் வடித்தவர்கள், இன்று அதிகாரம் கிடைத்தவுடன் ஊடகவியலாளர்களைக் காலால் எடையும் மிலேச்சத்தனமான சூழலை உருவாக்கியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இன்று மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை விடவும் மோசமான, சர்வாதிகார மற்றும் மிலேச்சத்தனமான ஆட்சி முறைக்குள் இலங்கை மக்கள் தள்ளப்படும் ஆபத்து உருவாகியுள்ளது.

இத்தகைய ஆபத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாரிய பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கே உள்ளது.
அதனை அவர்கள் சிறப்பாகச் செய்து வருவதை ஒடுக்கும் நோக்கிலேயே அரசு இந்த அடக்குமுறைகளைக் கையிலெடுத்துள்ளது.
எனவே, நாட்டில் ஊடக சுதந்திரத்துக்கு எதிரான இத்தகைய வதைகள் தொடராதவாறு அரசு தனது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறையை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20