286 நாட்கள் கடலில்… அமெரிக்காவின் பிரமாண்ட போர்க்கப்பலுக்கு நேர்ந்த நிலை
அமெரிக்காவின் USS Abraham Lincoln போர்க்கப்பல் தாய்லாந்து துறைமுகத்தை வந்தடைந்தபோது, அதன் தோற்றம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சான் டியாகோவிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் தாங்கிக் கப்பல், சுமார் 1,100 அடி நீளமுடையது. 286 நாட்கள் கடலில் தொடர்ச்சியாகப் பணியில் ஈடுபட்டதன் பின்னர், அதன் நீர்மட்டப் பகுதியில் முழுவதும் துருப்பிடித்த தடங்கள் காணப்பட்டன.
பல மாத கால போர்
இந்தக் காட்சி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியிருந்தாலும், கடற்படை நிபுணர்கள் இதை எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாகவே தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க கடற்படையின் தகவலின்படி, இந்தக் கப்பல் 286 நாட்கள் கடலில் இருந்ததுடன், மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான பல மாத கால போர் மற்றும் முற்றுகைப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தது.

முன்னாள் அமெரிக்க கடற்படை கப்டன் கார்ல் ஷஸ்டர் CNN-க்கு கருத்து தெரிவிக்கையில், 60 நாட்கள் அல்லது அதற்கு மேல் தொடர்ச்சியாக கடலில் செயல்பட்ட கப்பலில் நீர்மட்டப் பகுதியில் துருப்பிடிப்பது அசாதாரணமானது அல்ல எனக் கூறியுள்ளார்.
கப்பல் கடலில், குறிப்பாக போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், இந்தத் துருப்பிடிப்பை சரிசெய்வது நடைமுறையில் சாத்தியமற்றது எனவும் அவர் விளக்கியுள்ளார்.
இதனை சரிசெய்ய, பணியாளர்கள் கப்பலின் நீர்மட்டப் பகுதிக்கு கீழே சென்று துருவை அகற்றி, துருப்பிடிப்பைத் தடுக்கும் இரண்டு அடுக்கு பூச்சுகளைப் பூசி, அதன் பின்னர் கடற்படை பயன்படுத்தும் சாம்பல் நிற பெயிண்டின் இரண்டு அடுக்குகளை பூச வேண்டும்.
குறுகிய கால பயண இடைநிறுத்தம்
கார்ல் ஷஸ்டரின் கூற்றுப்படி, துருவை முழுமையாக அகற்றி கப்பலை சீரமைக்க சுமார் 30 நாட்கள் தேவைப்படலாம். சில அவசர சீரமைப்புப் பணிகள் தாய்லாந்தில் கப்பல் தரித்திருக்கும் காலத்திலேயே ஆரம்பிக்கப்படலாம்.
இருப்பினும், குறுகிய கால பயண இடைநிறுத்தம் என்பதால் மிக அவசரமான பகுதிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

USS Abraham Lincoln, பாங்கொக்கிற்கு தெற்கே தாய்லாந்து வளைகுடாவில் அமைந்துள்ள லேம் சபாங் துறைமுகத்தை புதன்கிழமை சென்றடைந்தது.
இந்தப் பயணம் சில நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நீண்ட கால கடற்படைப் பணிக்குப் பின்னர் கப்பல் பணியாளர்களுக்கு கிடைக்கும் முதல் முறையான ஓய்வு காலமாகவும் இது அமைந்துள்ளது.
யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்
கப்பல் தொடர்ந்து கடலில் பயணிக்கும் போது உப்பு நீர் மற்றும் கடல் அலைகளின் தாக்கத்தால் முன்பகுதி மற்றும் நீர்மட்டப் பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், எனவே அந்தப் பகுதிகளுக்கு முதலில் சீரமைப்பு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருப்பிடிப்பை அப்படியே விட்டுவிட்டால், அது மேலும் பரவி கப்பலின் கட்டமைப்பை பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே, USS Abraham Lincoln-ன் நீண்டகால பணியுடன் தொடர்புடையதாக மேலும் சில பிரச்சினைகளும் வெளியாகியுள்ளன.
விநியோகப் பற்றாக்குறையால் பணியாளர்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தது ஒரு பணியாளர் கப்பலில் இருந்து கடலில் விழுந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கப்பலில் நிலவும் சூழ்நிலை தொடர்பான கவலைகளை நிராகரித்துள்ளார்.