ராஜபக்ச குடும்பத்தில் பசில் - யோஷித வரிசையில் நாமல்! வரலாற்றில் பதிவான 4ஆவது கைது
இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (09.04. 2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் (2016இல் இருமுறையும் 2017இல் ஒருமுறையும்) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்சவுக்கு எதிராக, தற்போது மீண்டும் இலஞ்சக் குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் திட்டவட்டமாக மறுப்பதுடன், இந்த வழக்குகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள் என தொடர்ந்து கூறி வருகிறார்.
முதல் கைது..
2013ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் (Airbus A330 மற்றும் A350) விமானங்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக, இன்று காலை 9.00 மணிக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தின் போது ராஜபக்ச குடும்பத்தினர் 60 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐந்து மணி நேர விசாரணையின் பின்னரே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அவர் முன்னரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்ததுடன், எந்தவொரு சுயாதீன விசாரணைக்கும் முகம்கொடுக்கத் தயார் என்றும் தெரிவித்திருந்தார்.
நாமல் ராஜபக்ச முதன்முதலில் 2016 ஜூலை 11 அன்று நிதிப் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (FCID) கைது செய்யப்பட்டார்.
கொழும்பு கோட்டையில் முன்மொழியப்பட்ட 650 மில்லியன் டொலர் பெறுமதியான ஆடம்பரக் கட்டிடத் திட்டத்துடன் தொடர்புடையதாக, ரக்பி விளையாட்டின் வளர்ச்சிக்காக இந்திய நிறுவனமான 'கிரிஷ்' நிறுவனத்திடமிருந்து பெற்றதாகக் கூறப்படும் 70 மில்லியன் ரூபாயை (அக்காலகட்டத்தில் சுமார் 480,000 அமெரிக்க டொலர்) தவறாகப் பயன்படுத்தி, அதைத் தன் தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்தினார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்..
பசில் மற்றும் யோஷித ராஜபக்சவுக்குப் பிறகு இக்குடும்பத்தின் மூன்றாவது கைதான இச்சம்பவத்திற்குப் பிறகு அவர் சுமார் ஒரு வாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

மேலும், சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர், 2016 ஒகஸ்ட் 15 அன்று நிதிப் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டார்.
அங்கு, நாமல் ராஜபக்சவுடன் தொடர்புடைய 'கவர்ஸ் கோப்பரேஷன்' (Gowers Corporation) மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி 125 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 'ஹெலோ கோப்' (Hellocorp) நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்து பணமோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் ஒகஸ்ட் 22 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் வங்கிப் கணக்குகளை முடக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், பின்னர் 2023 நவம்பரில் கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது.
வரலாற்றுச் சம்பவம்..
அவரது மூன்றாவது கைது நடவடிக்கை 2017 ஒக்டோபர் 10 அன்று ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டது.

மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்திய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவதற்கு எதிராக ஹம்பாந்தோட்டையிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, சட்டவிரோதமாகக் கூடுதல், கடமைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இது நடந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.வி. சானக்க மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட குழுவினருடன் ஹம்பாந்தோட்டை பொலிஸில் முன்னிலையானதைத் தொடர்ந்து அவர் ஒக்டோபர் 16 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதன்போது ஆதரவாளர்கள் டயர்களை எரித்து சிறை வாகனத்தை மறிக்கவும் முயன்றனர்.
பின்னர், 2025 ஜூலையில், மாலைதீவில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றதால் 2017 போராட்ட வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதற்காக ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. எனினும், மறுநாள் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்து அந்த பிடியாணை திரும்பப் பெறப்பட்டது.

இவ்வாறிருக்கையில், இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டத்தரணிகள் சேர்க்கையில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணை நடத்தி வருகிறது, மேலும் பல பணமோசடி புகார்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனான, 1986இல் பிறந்த நாமல் ராஜபக்சஈ முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் (2020 - 2022), 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மிக இளைய வேட்பாளரும் ஆவார்.
தற்போது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவரது அரசியல் தொகுதி ஹம்பாந்தோட்டை ஆகும். 2015 முதல், மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கங்களின் கீழ் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக பல விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 12ஆம் திகதி வரப்போகும் மிகப்பெரிய கூட்டம்: நாமலின் தலைவிதியை தீர்மானிக்கும் 159 பேர்..! அவரே தெரிவித்துள்ள விடயம்
YOU MAY LIKE THIS VIDEO..
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening