மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர் மற்றும் நாமல் ஒரே சிறையில்..! வெளியான முக்கிய தகவல்
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா தற்போது கொழும்பு விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இலங்கை பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினரும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முன்னாள் தலைவருமான ரேணுக பெரேரா, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
'N' வார்டில் 10 கைதிகளுடன்
தற்போது அவர் சிறைச்சாலையின் 'N' வார்டில், மேலும் சுமார் 10 கைதிகளுடன் அவர் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதே வார்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களும் அந்த வார்டில் வைக்கப்பட்டுள்ள கைதிகளாவர்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ரேணுகா பெரேரா, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சட்டவிரோதமாக சாலை அனுமதிகள்
பேருந்துகளுக்கு சட்டவிரோதமாக சாலை அனுமதிகள் வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டில் இலஞ்ச ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.
1991-ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணையச் சட்டத்தின் விதிகளுக்கும், 2014.09.19 திகதியிட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பரிந்துரைகளுக்கும் முரணாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு சட்ட முறைக்குப் புறம்பாக 56 பயணிகள் சேவை அனுமதிகளை வழங்கியதாகவும், ஆண்டு சுங்கத்தை ஒரே முறையில் வசூலிக்கவில்லை என்றும் ரேணுகா பெரேரா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.