நாமலே அடுத்த ஜனாதிபதி - மொட்டுக் கட்சி திட்டவட்டம்
வரும் 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்ச போட்டியிடுவார் என்றும், அவரே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என்றும் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கட்சித் தலைமையகத்தில் நேற்று(17.09.2026) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அரசின் தொலைநோக்கற்ற கொள்கைகள்
மேலும் தெரிவிக்கையில், "கட்சியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும் அல்லது சிறையில் அடைக்கப்பட்டாலும், தாய்நாட்டைப் பாதுகாக்கும் கட்சியின் வேலைத்திட்டங்கள் தடையின்றித் தொடரும்.

தற்போதைய அரசு நாட்டின் திறைசேரியை நிரப்புவதற்கு புதிய முதலீடுகளையோ அல்லது அபிவிருத்தித் திட்டங்களையோ முன்னெடுக்காமல், பொதுமக்கள் மீது தொடர்ச்சியாக அதிக வரிகளைச் சுமத்துகின்றது.
இந்த அரசு வரிகளை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு வேடிக்கையான ஆட்சியாக மாறியுள்ளது. பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி அரசின் விவசாயிகள் மாநாட்டில் விவசாய அமைச்சரும், அவரது பிரதி அமைச்சரும் கலந்துகொள்ளவில்லை.
அரசின் தொலைநோக்கற்ற கொள்கைகள் காரணமாக சொந்த அமைச்சர்களே ஜனாதிபதியின் திட்டங்களைப் புறக்கணிக்கும் நிலை உருவாகியுள்ளது.
எமது கட்சியின் அனுராதபுரக் கூட்டத்தில் உரையாற்றிய அர்ஜுனா இராமநாதன் எம்.பி., இனவாதத்தையோ அல்லது பிரிவினைவாதத்தையோ ஆதரித்துப் பேசவில்லை. இனிமேல் பிரிவினைவாதத்துக்கு இடம் கொடுக்கப்போவதில்லை" என்றும குறிப்பிட்டுள்ளார்.