இலங்கையில் மோசமாக நடந்து கொண்ட கனேடிய பெண் கைது
கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள ஒரு மருத்துவ ஆய்வகத்திற்கு சென்று தங்குவதற்கு இடம் கேட்ட கனேடிய பெண் ஒருவர், அங்கு மோசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணப் பையுடன் மருத்துவ மையத்திற்கு வந்த வெளிநாட்டுப் பெண் தங்குவதற்கு இடம் கேட்டுள்ளார்.
அவர் அங்கிருந்து வெளியேற மறுப்பதாகவும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும் ஊழியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும் அவசர உதவி எண் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணை
இந்த முறைப்பாட்டிற்கமைய, சுற்றுலாப் பிரிவுப் பொறுப்பதிகாரி மிலன் ராஜபதிரன தலைமையிலான குழுவினர் அந்த மருத்துவ ஆய்வகத்திற்கு சென்றனர்.

கனேடிய பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரிடம் செல்லுபடியாகும் விசா அல்லது கடவுச்சீட்டு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் பல ஆண்டுகளுக்கு முன்பு அஹங்கம பகுதியில் வசித்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட கனேடிய பெண், நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்தக் காலப்பகுதியில் அவரை வெலிசர பகுதியில் உள்ள வெளிநாட்டினருக்கான தடுப்பு முகாமிற்கு மாற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.