அல்கைதாவுடன் தொடர்புடைய இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை
அல்கைதா அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள் நான்கு பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் இலங்கையைச் சேர்ந்த சிலர் அல்கைதா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தமை குறித்து தகவல்களை திரட்டியிருந்தனர்.
இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டில், பயங்கரவாதத் தடுப்புப் விசாரணைப் பிரிவு குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
சர்வதேச பிடியாணை
அத்தோடு, கொழும்பு மேல் நீதிமன்றில் பத்து சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில் மேலும் ஐந்து சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் வழக்குடன் தொடர்புடைய மேலும் நான்கு பேர் இலங்கையை விட்டும் வெளியேறி வேறு நாடுகளில் வசிப்பதாக பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தனர்.
மேலுடம், அவர்களுக்கு எதிராக சர்வதேச பிடியாணை ஒன்றைப் பிறப்பிக்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்படி வழக்கின் முதலாம்,. இரண்டாம், ஒன்பதாம் மற்றும் பதினாறாம் சந்தேக நபர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை
சந்தேக நபர்கள் முன்னர் கல்எளிய மற்றும் கலகெடிஹேன பிரதேசத்தில் வசித்துள்ளதுடன் தற்போது அவுஸ்திரேலியா மற்றும் சிரியாவில் வசிப்பதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மகன் மற்றும் மேலும் இருவரே இவ்வாறு வெளிநாடுகளில் வசிப்பதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கைஎனப்படும் சர்வதேச பிடியாணை நேற்று நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க குறித்த நான்கு பேருக்கும் எதிராக சர்வதேச பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |