ரஷ்யா-உக்ரைனில் உள்ள இலங்கையரை அழைத்துவரத் தயார்! உதயங்க வீரதுங்க
தற்போது ரஷ்யாவிலும் உக்ரைனிலும் கூலிப்படையாக பணிபுரியும் இலங்கை இராணுவத்தினரை ஒரு வாரத்திற்குள் இந்த நாட்டுக்கு அழைத்து வர முடியும் என உதயங்க வீரதுங்க(Udayanga Weeratunga) தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போது இதனை கூறியுள்ளார்.
ஆட்கடத்தல்காரர்கள்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், 'இன்று இலங்கை இராணுவ வீரர்கள் பல்வேறு நாடுகளுக்கு கூலிப்படையாக அனுப்பப்படுவதால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுவருகிறது.
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு ஆட்கடத்தல்காரர்கள் இணைந்து இந்த கடத்தலை நடத்துகிறார்கள். இலங்கை அரசும் அதிகாரிகளும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
ரஷ்ய மற்றும் உக்ரேனிய அரசாங்கங்கள் கூலிப்படையினரை நேரடியாக பணியமர்த்துவதில்லை. இவ்வாறு பணியமர்த்தப்படும் கூலிப்படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதில்லை.
அவர்கள் போரின் முன் வரிசையில் நேரடியாகப் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். முன் வரிசையில் சுமார் 1500 வெளிநாட்டினர் கொண்ட கூலிப்படை இருப்பதாக உக்ரைனின் தூதர் என்னிடம் கூறினார். அவர்களுள் அதிக எண்ணிக்கையிலான இலங்கை இராணுவத்தினர் உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
விடுக்கப்பட்ட வேண்டுகோள்
போரில் இறந்தவரின் உடலைக் கூட இலங்கைக்கு கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. உக்ரைன் அல்லது ரஷ்யா இராணுவத்தில் இணைய வேண்டுமாயின் அந்நாட்டு பிரஜையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கூலிப்படையாக செல்வதால் இருநாடுகளும் எந்தப் பொறுப்பையும் ஏற்காது.எனவே இது ஒரு வியாபாரம். இதில் சிக்காதீர்கள். இது ஒரு வழிப்பாதை டிக்கட் மட்டுமே, திரும்பும் டிக்கெட் இதில் இல்லை.
நான் மத்தியஸ்தராக செயற்பட்டால் இதை ஒரு வாரத்தில் முடிவுக்கு கொண்டுவர முடியும் ஆனால் அரசாங்கம் அதற்காக என்னிடம் வேண்டுகோள் விடுத்தால் மட்டுமே இந்த விடயத்தில் என்னால் தலையிட முடியும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |