தீவிர போதைப்பொருளுக்கு அடிமையான பேருந்து சாரதிகள்! அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்து சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் தீவிர போதைப்பொருள் அடிமைகளாக உள்ளனர் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சிறப்பு குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துகள்
2025 ஆம் ஆண்டில் 2,700 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 2,700 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் சுமார் 2,000 பேர் பாதசாரிகள், மோட்டார் சைக்கிள் சாரதிகள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் எனவும், உயிரிழந்தவர்களில் 53 சதவீதம் ஆண்கள் எனவும் தெரிவித்தார்.

விசாரணைகளின் மூலம், விபத்துகளில் சுமார் 50 சதவீதத்திற்கு சாரதிகளே காரணமாக இருந்துள்ளனர் எனவும், அவர்களில் பெரும்பாலானோர் மது அல்லது சட்டவிரோத போதைப்பொருட்களை பயன்படுத்தியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.
மேலும், பேருந்து சங்கங்களின் தகவல்களின் அடிப்படையில், அவர்களது சாரதிகளில் சுமார் 60 சதவீதம் பேர் போதைப்பொருட்களுக்கு அடிமைகளாக உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சாரதிகளின் எண்ணிக்கை
இதனிடையே, நடமாடும் பரிசோதனை அலகுகள் மூலம் 53 சாரதிகள் பரிசோதிக்கப்பட்டதில், 10 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
எனினும், பரிசோதனைகளுக்குப் பின்னர் பல சாரதிகள் மறுநாள் பணிக்கு வராமல் இருந்தமையால், உண்மையான போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீள்வதற்குத் தயாராக உள்ள சாரதிகளுக்கு மறுவாழ்வு சிகிச்சை வழங்கப்படும் எனவும், அதற்கு ஒத்துழைக்காதவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், முறையான பயிற்சி பெற்றதும், சிறப்பு அனுமதிப் பத்திரம் பெற்றதும் இல்லாமல் இனிமேல் எந்த சாரதிக்கும் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan