ரணிலைப் பிரதமர் பதவிக்கு ஒருபோதும் முன்மொழியவில்லை! மஹிந்த அமரவீர
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு ஒருபோதும் முன்மொழியவில்லை என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டவர்கள் , ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமர் பதவிக்கு நியமிக்குமாறு முன்மொழிந்திருந்ததாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டியிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பொய் கூறினாரா?
அதற்குப் பதிலளித்த விமல் வீரவங்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே தன்னிடம் அப்படி தெரிவித்ததாக குறிப்பிட்டார். மஹிந்த அமரவீர அதனை மறுப்பதாக இருந்தால் ஜனாதிபதியே பொய் சொல்வதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட நாளின் காலையில் கூட சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் விமல் வீரவங்ச சுட்டிக் காட்டினார்.
அதன் போது கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, ரணிலைப் பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தது யார் என்பது குறித்து ஆராய்ந்து அதனை நாடாளுமன்றத்துக்கு அறியத் தருமாறு விமலிடம் கேட்டுக் கொண்டார்.