ரணிலின் முதல் பலி மத்திய வங்கியின் ஆளுநர் - நளின் பண்டார வெளியிட்ட தகவல்
புதிய நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்கவின் முதல் பலி தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவே என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர் பொருளாதார நெருக்கடி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருடன் ஒருபோதும் கலந்துரையாடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்று 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தக் காலப்பகுதியில் மத்திய வங்கி ஆளுநரை பிரதமர் எப்போதாவது சந்தித்தாரா? என்பது எமக்கு தெரியாது. மத்திய வங்கியின் ஆளுநருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் பாரிய முரண்பாடு காணப்படுகின்றமை எமக்குத் தெரியும்.
2015க்கு பிறகு நடந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக பல தகவல்கள் உள்ளன. ஏனெனில் மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க பிணைமுறி கொடுக்கல் வாங்கலின் போது பிரதி ஆளுநராக இருந்தார். பிணை முறி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தவர்களில் கலாநிதி நந்தலாலும் ஒருவர்.
அதனால்தான் கடந்த இரண்டு வாரங்களாக ரணில் விக்ரமசிங்க மத்திய வங்கியுடன் இணைந்து பணியாற்றவில்லையா? இன்று நிதியமைச்சராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவின் மத்திய வங்கியின் கொள்கைகள் என்ன? கலாநிதி நந்தலால் வீரசிங்கவை எவ்வாறு கையாள்வது? தற்போதைய நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்கவின் முதல் பலியாக நந்தலால் வீரசிங்க இருப்பாரா என்ற கேள்வி எம் உள்ளங்களில் கேள்விக்குறியாக உள்ளது.
மத்திய வங்கி போன்ற ஒரு நிறுவனம் அரசியலில் இருந்து விடுபட்ட சுதந்திரமான நிறுவனமாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் மரியாதையுடனும் பொறுப்புடனும் கூறுகிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
