கோட்டாபயவின் வெளிநாட்டு பயணத்தடை உத்தரவினால் கலக்கத்தில் ராஜபக்சர்கள்! பின்னணியில் இரகசிய திட்டம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிரான வெளிநாட்டுப் பயணத்தடை உத்தரவினால் ராஜபக்சர்கள் கலக்கமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையின் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தது.
திரிபுபடுத்தப்பட்ட பிரச்சாரங்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளைத் திசைதிருப்பியமை மற்றும் தகவல்களை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உள்ளிட்ட மூவருக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளுடன் தொடர்புடையதாக இந்தப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டு பயணத்தை நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.
இந்த உத்தரவினால் கலக்கமடைந்த ராஜபக்சர்களும், அவர்களின் சகாக்களும் பல பொய்யான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் பல்வேறு பிரச்சார நடவடிக்கைகளைத் தொடங்க திட்டமிட்டு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.