வாள்வெட்டுக் குழுவினரின் அட்டகாசம் அதிகரிப்பு - பொலிஸ் நிலையம் முன்பாகப் போராட்டத்தில் குதித்த மக்கள்
மட்டக்களப்பு - வவுணதீவு, வாழைக்காலை பிரதேசத்தில் கோபு வாள்வெட்டுக் குழுவின் தாக்குதலைக் கண்டித்தும், வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞனுக்கு நீதி கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் நேற்று (25.11.2026) பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
வாள்வெட்டுக்குழுவினருக்கு எதிராக கிளம்பிய மக்கள்
கோபு வாள்வெட்டுக் குழுவினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று (25) வவுணதீவு வீதி சுற்றுவட்டத்தில் காலை 10.00 மணிக்கு ஒன்றிணைந்து, “கோபுவின் இந்த இரத்த வேட்டைக்கு முடிவில்லையா?”, “கோபு வாள்வெட்டுக் குழு ஒழிக”, “கோபுவின் பயங்கரவாதம் ஒழிக”, “கோபுவின் கசிப்பு, கள்ள மண் கொள்ளையைத் தடுத்து நிறுத்து”, “பொலிஸாரே, நீதி வேண்டும்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அழைத்து, போராட்டக்காரர்களிடம் நிலைமையைக் கேட்டறிந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கோபு வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த மூவரைக் கைது செய்துள்ளதாகவும், கோபு என்பவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை
அந்தக் குழுவினர் தொடர்பாக நீங்கள் பயப்பட வேண்டாம் என்றும், அந்தக் குழுவினரால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாகத் தனது கையடக்கத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் தெரிவித்து, தனது தொலைபேசி இலக்கத்தையும் வழங்கியுள்ளார்.

யாராக இருந்தாலும் சட்டத்தைக் கடைப்பிடிப்போம் என அவர் தெரிவித்ததையடுத்து, கோபு வாள்வெட்டுக் குழுவை இல்லாதொழிக்குமாறு கோரி போராட்டக்காரர்கள் மனுவொன்றையும் பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.
அதன் பின்னர், போராட்டக்காரர்கள் அந்தப் பகுதியில் இருந்து கலைந்து சென்றுள்ளனர்.
