சட்டச் சிக்கல்களுக்கு மத்தியில் சாட்டியில் மாவீரர் நாள் நினைவேந்தல்!
சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதில் சட்டரீதியான தடைகள் மற்றும் காணி உரிமை தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் சாட்டியில் சிறப்பாக இடம்பெறும் என தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கு முன்பாக அமைந்துள்ள வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திடலில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
நினைவேந்தலை நடத்துவதற்குத் தடை
காணி உரிமை கோரலால் ஏற்பட்ட சர்ச்சை சாட்டி மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள காணிக்கு தனிநபர் ஒருவர் உரிமை கோரியுள்ளதுடன், குறித்த காணியில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை விதிக்குமாறு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து பொலிஸார் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்தனர். இதனால் இம்முறை சாட்டி துயிலுமில்ல வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்திருந்தது.
கடந்த நவம்பர் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நினைவேந்தலைத் தடை செய்வதற்கான உரிய சட்ட ஏற்பாட்டை பொலிஸார் தெளிவாக முன்வைக்கவில்லை என்ற ஆட்சேபனை சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், துயிலுமில்ல வளாகத்தில் நினைவேந்தலை நடத்துவதற்குத் தடைகள் ஏற்படும் பட்சத்தில், மக்களின் நினைவேந்தல் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் மாற்று இடமொன்றை வழங்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் வேலணை பிரதேச சபையிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சபை அதற்கான இடமொன்றை வழங்கியிருந்தது.
இதனிடையே, நவம்பர் 20ஆம் திகதி நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், இறந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக பொது இடையூறு ஏற்படுத்தப்படக் கூடாது மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்கள் அல்லது அடையாளங்கள் காட்சிப்படுத்தப்படக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் நினைவேந்தலை முன்னெடுக்க முடியும் என நீதிமன்றம் தெரிவித்ததாகவும், காணியின் உரிமை தொடர்பான விவகாரத்தில் தீர்மானம் எதனையும் வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வுகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும்
இதனால் காணி உரிமை தொடர்பான சர்ச்சை ஒருபுறம் தொடர்ந்தாலும், நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் மறுபுறம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் ஏற்கனவே கடந்த நவம்பர் 18ஆம் திகதி சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஆரம்பகட்ட ஏற்பாட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், துயிலுமில்ல வளாகத்தில் நினைவேந்தலை நடத்துவதற்குச் சட்டரீதியான அல்லது வேறு தடைகள் ஏற்பட்டாலும், அதற்கு முன்பாக உள்ள வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் பிரத்தியேகமாகத் தயார்படுத்தப்பட்டுள்ள திடலில் மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
எனவே, இம்முறை சாட்டியில் நினைவேந்தல் நிகழ்வுகள் எந்த இடத்தில் இடம்பெற்றாலும், நவம்பர் 27ஆம் திகதி மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.