பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த கனடா கந்தசுவாமி ஆலய பக்தர்களின் நெகிழ்ச்சி செயல்
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மலையகத்தின் நுவரெலியா - டிக்கோயா வாழ் மக்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையத்திற்கு கனடா கந்தசுவாமி ஆலய பக்த கோடிகளினால் சஷ்டி விரதத்தின் போது 37,411 டொலர்கள் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நிவாரணக்குழுவின் தொண்டன் க. இராசநாதன் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
மக்களுக்கான மருத்துவ உதவிகள்
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
சஷ்டி விரதத்தின் போது பெறப்பட்ட 37,411 டொலர்கள் நிவாரணம் எனும் உயிர் காப்பு அறக்கட்டளையினை நெடு நாட்களாக வழி நடாத்தி வரும் செந்தில் குமரனின் இடையறாத தொடர் மனிதநேயக் கனவுகள் அவரது அபாரமான செயற் திறன் மூலம் எத்தனையோ குடும்பங்களில் வாழ்வின் நம்பிக்கையை பூத்துக் காய்த்துக் குலை சாய்க்க வைக்கும் நனவாகிக் கொண்டிருக்கின்றது என்பது வெளிப்படையான யதார்த்தமாகும்.
இந்த வழியாக தாயகத்தில் நலிவுற்றோர் நலன் வேண்டி நாளும் பொழுதுமாக இயந்திரமாய் ஓயாது செயலாற்றிக் கொண்டிருப்பவர் தான் செந்தில் குமரன், என்பது உலக சமூகமே நன்கறிந்த உண்மையாகும்.

கடந்த மாதம் மனித நல மேம்பாட்டின் பொருட்டு லங்காசிறி, தமிழ்வின், IBC தமிழ் பிரதான ஊடக அனுசரணையுடன் வெற்றிகரமாக அவர், அரங்கேற்றிய MGR 110 எனும் மாபெரும் நிதிசேர்ப்பு இசை நிகழ்ச்சியின் பயன் மிக்க அடைவுகளைத் தொடர்ந்து இதன் அடுத்த கட்ட ஒரு நிதித் தேடலாக கடந்த 09-11-26 தொடக்கம் 15-11-26 வரையான நாட்களாக இடம் பெற்ற கந்த சஷ்டி விரத வாரத்தின் ஏழு நாட்களும் 733 Birchmount Rd, Scarborough ல் அமையப் பெற்ற கனடா கந்தசாமி ஆலயத்தில் தமது தொண்டர்கள் சகிதம் வழமையான மற்றுமோர் நிதிசேர்ப்பினை மேற்கொண்டிருந்தனர்.
வழமையாக ஆண்டு தோறும் முக்கியமான பண்டிகை நாட்களில் இந்த ஆலயத்தின் செந்தில் குமரன் தன் தொண்டர் சகிதம் நின்று மக்கள் மனமுவந்து அளிக்கும் நன்கொடைகளை பெற்று இதுவரை பத்தொன்பது உயிர் ஊசலாடும் தாயக உறவுகளின் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து காப்பாற்றியுள்ளதோடு, கிளிநொச்சி மருத்துவமனைக்கு ஒரு குருதி சுத்திகரிப்பு இயந்திரத்தையும் வழங்கியுள்ளார் என்பது தாயக மக்கள் மேல் இவருக்கு இருக்கும் அளப்பரிய நேசத்தை தெள்ளத்தெளிவாக காட்டுகின்றது.
ஆலயத்தில் திரட்டப்பட்ட நிதி
விரதத்தின் தொடக்க நாள் ஆலயத்தில் காலை வேளை கொடையாளரை வரவேற்பதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்குவதற்கு முன்னரே பல தயாள மனம் படைத்த பக்தர்கள் இறை பணிக்கு ஒப்பான இந்த உயிர் காப்புப் பணியில் தம் பங்கையும் வழங்குதற்காக அவ்விடத்தில் வாஞ்சையுடன் கூடி நிதி சேர்ப்புப் பணியாளரை எதிர்பார்த்துக் காத்து நின்ற காட்சி வியப்பிற்குரியதே.
அந்த நிமிடம் தொடக்கம் தொடராக ஏழு நாட்களும் தேடித் தேடி கை நிறைய மனம் நிறைய சிறுவரில் இருந்து முதியோர் வரை இறை வணக்கச் செயற்பாடுகளில் ஒரு அத்தியாவசிய பகுதியாய் இந்த நன்கொடைப் பணியையும் சிரமேற்று தாராள மனத்தவராய் தானம் வழங்கி நின்ற செயலானது அந்த கனடாக் கந்தன் செயலேயன்றி வேறில்லை என்பது திண்ணமாகிறது.

சூரன் போரான ஆறாவது நாளுடன் மற்றும் மறுநாள் திருக்கல்யாணம் வரை மக்கள் மனமுவந்து வழங்கிய நிதியின் தொகையாக 37,411 கனேடிய டொலர்கள் இப்பொதுப் பணிக்குக் கிடைக்கப் பெற்றன.
இந்த நிதியின் மூலம் தாயகத்தின் நுவரெலியா மற்றும் டிக்கோய பகுதிகளின் வறுமையின் பிடியில் நோயின் கொடூரத்தில் சிக்கி தவிக்கும் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு குருதி சுத்திகரிப்பிற்கு தேவைப்படும் நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை (RO Plant) நிறுவப் படப்போகின்றதென்ற நற்செய்தி அனைவர் உள்ளங்களையும் குளிர வைத்துள்ளது.
இலங்கை மக்களுக்கான உயிர்க்காப்பு வேலைத்திட்டம்
இந்த புதிய நிலையங்கள் அமையப்பெறுகையில் பனிரெண்டு மணித்தியால நேரச்செலவோ பயணச்செலவோ அந்நோயாளிகளிக்கு இல்லாமல் போவது மிக பெரிய வரப்பிரசாதமாக அமையும்.
எல்லாப் புகழும் கனடா கந்தசாமி முருகவேளின் பாதக் கமலங்களின் சமர்ப்பணமெனில் மறு வார்த்தை இல்லவே இல்லை. அமையும். எல்லாப் புகழும் கனடா கந்தசாமி முருகவேளின் பாதக் கமலங்களின் சமர்ப்பணமெனில் மறு வார்த்தை இல்லவே இல்லை. இவை அனைத்திற்கும் மேலாக ஓர் உந்து சக்தியாய் என்றும் விளங்கும் ஆலய நிர்வாகத் தலைமைப் பொறுப்பிலுள்ள மதிப்பிற்குரிய "முத்து " மற்றும் ஆலயத்தின் அறங்காவல் குழுவும், அனைத்து ஊழியர்கள் தொண்டர்கள் வரை முழு அளவிலான ஒட்டு மொத்த ஆதரவும் ஒத்தாசைகளுமே இத்தனை உயிர்களையும் இழப்பின் விளிம்பில் இருந்து மறு வாழ்வு படைப்பதற்கும் வல்ல முருகன் வழங்கிக் கொண்டிருக்கும் வரப்பிரசாத அருளை வாழ்த்துவதற்கு ஆயிரம் மொழிகள் வேண்டும்.

இந்த குருதி சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதன் மூலம் பலநூறு உயிர்கள் ஆண்டு தோறும் காப்பாற்றப்படும் வாய்ப்பு கைகூடியிருப்பது மனிதத்தின் வெகுமதியை வேண்டி நிற்கும் வலுவிழந்த மக்கள் சமூகத்திற்கு எங்கள் கொடையாள மனம் கொண்ட புலம் வாழ் ஈழத்தமிழர்கள் வழங்கிவரும் தாராள மனத்துடனான பொருண்மிய ஆதரவே மூலாதரமான ஒன்று.
மதங்களே வணங்கும் மதமாக மனிதம் என்கின்ற இந்த நிவாரணத் தாய் மதம் தழைத்தோங்க மனிதவர் நாம் மனம் நிறைந்த தோள் கொடுப்போம் எனக்குறிப்பிட்டுள்ளது.
