ரஷ்ய தொலைக்காட்சியில் திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்ட விளாதிமிர் புதினின் பேச்சு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 25 ஆவது நாளாக நீடிக்கின்றது.
உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகளுக்கு ரஷ்ய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தலைநகர் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் உள்ளிட்ட 56 நகரங்களில் அதிபர் புடினுக்கு எதிராக கோஷம் எழுப்பி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் ஈடுபட்ட ஏறக்குறைய 1,400 ஆர்ப்பாட்டக்காரர்களை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இலட்சக்கணக்கான மக்கள் முன் பேசும்போது, அதிபர் புதினின் பேச்சை ரஷ்ய தொலைக்காட்சி பாதியிலேயே நிறுத்தி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யா கடந்த 2014ம் ஆண்டு கிரிமியாவை தனது நாட்டுடன் இணைத்தது மற்றும் உக்ரைனில் ரஷ்ய ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கை ஆகியவற்றுக்கு ஆதரவாக ரஷ்ய அதிபர் புதின் நாட்டு மக்கள் முன் உரையாற்றியிருந்தார்.
இதற்காக, அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் கலந்து கொண்டதுடன், இந்த பொதுக்கூட்டத்தில், மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் 2 இலட்சத்துக்கு மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.
இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் முன் புதின் உரையாற்றிய நிகழ்ச்சியை ரஷ்ய நாட்டின் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்த போது, திடீரென இடையூறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அந்நாட்டின் நாட்டுப்பற்றுக்கான இசை ஒலிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய நாட்டு தொலைக்காட்சி மிக தீவிர கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு வரும் நிலையல், செர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ஒளிபரப்பில் தடங்கலானது என கிரெம்ளின் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.