ரஷ்ய ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்க புரட்சிப் படை தீவிரம்
ரஷ்ய பாதுகாப்பு அமைப்பு ஒன்று உருவாக்கி வரும் ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம் வேகமாக வளர்ந்து வருவதாக ரஷ்யாவைச் சேர்ந்த ஊழலை அம்பலப்படுத்தும் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் புடினுடைய அதிபர் பதவி எந்த நேரமும் பறிபோகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனை ஊடுருவ ரஷ்யா போட்ட திட்டம் குளறுபடியாக, ரஷ்ய பெடரல் பாதுகாப்பு சேவை (Russia's Federal Security Service - FSB) அமைப்புக்குள் குழப்பமும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, புடினுடைய அதிபர் பதவி எந்த நேரமும் பறிபோகலாம் என அவர் கூறியுள்ளார்.
பெப்ரவரி 24ஆம் திகதி ரஷ்யா உக்ரைனுக்குள் ஊடுருவியபோது, அவ்வளவுதான் உக்ரைன் காலி என்றே ரஷ்யாவைப் போலவே பலரும் நினைத்தார்கள்.
ஆனால், இன்று வரை உக்ரைன் கெத்தாக நின்று ரஷ்யா என்னும் வலிமை மிக்க நாட்டின் படைகளைச் சமாளிக்கிறது. இதனால் எப்.எஸ்.பி அமைப்பிலுள்ளவர்களுக்கு அதிபர் புடின் மீது கோபம் ஏற்பட்டுள்ளதாக விளாடிமிர் ஒசேச்க்கின் தெரிவிக்கிறார்.
இவர்தான் ரஷ்யச் சிறைகளில் நடக்கும் துஷ்பிரயோகங்கள் குறித்த தகவல்களை வெளி உலகுக்குத் தெரியப்படுத்தியதால் ரஷ்ய அரசால் தேடப்படுபவர்.
நினைத்தது போல உக்ரைனை எளிதாகக் கைப்பற்ற முடியாததற்காக புடின் எப்.எஸ்.பி மீது குற்றம் சாட்ட, எப்.எஸ்.பி அமைப்பிலுள்ளவர்களோ மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதித்து வரும் தடைகளால் விரக்தியடைந்துள்ளார்கள்.
இந்த அமைப்பிலுள்ளவர்கள் பயணம் செய்யவும், தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் ஒசேச்க்கின், அவர்கள் மீண்டும் பழைய சோவியத் யூனியன் உருவாகும் நிலைக்குச் செல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
போர் நீடிக்க நீடிக்க அவர்களது எதிர்ப்பும் வலுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்