தோல்வியின் விளிம்பில் ரஷ்யா - அணுவாயுத தாக்குதலுக்கு தாயாராகும் புடின்
ரஷ்யா இன்னும் உக்ரைனில் தனது இராணுவ இலக்குகள் எதையும் அடையவில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மொஸ்கோ அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்ற கருத்தையும் அவர் நிராகரிக்கவில்லை என செய்தி வெளியாகியுள்ளது.
தனது இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என புட்டினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். CNN ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
புட்டின் எந்த சூழ்நிலையில் ரஷ்யாவின் ஆயுத திறனைப் பயன்படுத்துவாரா என செய்தித் தொடர்பாளரிடம் கேள்வி எழுப்பியதற்கு, எங்கள் இருப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என அவர் பதிலளித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலாகக் கருதும் நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை புடின் இதற்கு முன்னர் சுட்டிக்காட்டினார்.
கடந்த மாதம் ரஷ்ய ஜனாதிபதி ஒரு தொலைக்காட்சி அறிக்கையில், “எங்கள் வழியில் நிற்க முயற்சித்தாலும் அல்லது எங்கள் நாட்டிற்கும் எங்கள் மக்களுக்கும் அச்சுறுத்தல்களை உருவாக்குவது எதுவாக இருந்தாலும், ரஷ்யா உடனடியாக பதிலளிக்கும் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். அதன் விளைவுகள் உங்கள் முழு வரலாற்றிலும் நீங்கள் பார்த்திராத வகையில் இருக்கும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் உக்ரைனில் புட்டின் என்ன சாத்தித்துள்ளார் என செய்தி தொடர்பாளரிடம், ஊடகவியலாளர் வினவியதற்கும், இன்னும் ஒன்றையும் சாதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் திட்டங்களின்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலக்குகள் எட்டப்படும் வரை இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என செய்தி தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.