மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு பரிந்துரை
மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நேசனல் சிஸ்டம் ஒபரேட்டர், சமர்ப்பிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தப் யோசனை தொடர்பான முதற்கட்ட மீளாய்வின் பின்னர் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 1.46% அதிகரிப்பதற்கு இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
2026 இன் நான்காம் காலாண்டில் 4.4 பில்லியன் ரூபா வருமானப் பற்றாக்குறை ஏற்படும் எனக் குறிப்பிட்டு, மின் விற்பனை வருவாயை 2.88% அதிகரிக்குமாறு ஆரம்பத்தில் கோரப்பட்டிருந்தது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தரவுகளின்படி, இக்காலாண்டிற்கான மின் விநியோகத்திற்கான மொத்த எதிர்பார்க்கப்பட்ட செலவு 157.3 பில்லியன் ரூபாவாகும்.
இதேவேளை, மின் விற்பனை மூலம் எதிர்பார்க்கப்படும் வருமானம் 154 பில்லியன் ரூபாவாகும். அத்துடன், கடந்த காலப்பகுதியில் நிலவிய 1.1 பில்லியன் ரூபா வருமானப் பற்றாக்குறையும் இதில் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், தமது முதற்கட்ட மதிப்பீட்டைத் தொடர்ந்து, முன்மொழியப்பட்ட கட்டண அதிகரிப்பை 2.88% இலிருந்து 1.46% ஆக ஆணைக்குழு குறைத்துள்ளது.
இலங்கை மின் உற்பத்தி நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட உற்பத்தித் திறன் செலவுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் 2026 இன் இரண்டாம் காலாண்டில் தரமற்ற நிலக்கரி பயன்பாடு தொடர்பான மேலதிக செலவு மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ததைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இக்காலாண்டிற்கான இறுதி மின்சாரக் கட்டணத் தீர்மானத்தை எட்டுவதற்கு முன்னர், முன்மொழியப்பட்ட கட்டணத் திருத்தம் குறித்த பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பகிரங்க கலந்தாய்வு செயல்முறையையும் ஆரம்பித்துள்ளது.
இந்த கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் 0770399119 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் பதிவு செய்ய முடியும் என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.