மாகாண சபைத் தேர்தலுக்கு முட்டுக்கட்டையாகும் சட்டச் சிக்கல்..! தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்
மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் நிலவும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, அதற்குரிய அறிக்கையை விரைவில் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்குமாறு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் பற்றி ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் அவகாசம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை மற்றும் தேர்தல் நடத்தப்படுவதில் நிலவும் முட்டுக்கட்டைகள் குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபை தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் ஆணைக்குழு சார்பில் முன்னிலையாகிப் பல முக்கிய யோசனைகளை முன்வைத்துள்ளோம். பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் எனச் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள திருத்தப் பரிந்துரைகளுக்கு இணையாக, எங்களது தரப்பு யோசனைகளையும் சமர்ப்பித்துள்ளோம்.

முன்வைக்கப்படும் யோசனைகளையும் பரிந்துரைகளையும் விரைவாக ஆராய்ந்து, நாடாளுமன்றம் ஒரு உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் நீண்டகாலமாக இயங்குவது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் விரோதமானதாகும்.
முழுமை பெறாமல் இருக்கும் புதிய தேர்தல் முறைமை
மாகாண சபைத் தேர்தல் குறித்துத் தன்னிச்சையாகத் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடையாது. 2017 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் சட்ட அம்சங்கள் இன்னும் முழுமை பெறாத காரணத்தால், எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பதில் சட்டச் சிக்கல் நீடிக்கின்றது.

எனவே, தேர்தல் முறைமை குறித்து நாடாளுமன்றத்தின் ஊடாகவே தெளிவான சட்டத் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் தேர்தலை நடத்துவது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகளை எம்மால் வெளியிட முடியும். அத்துடன், பெண் பிரதிநிதித்துவம் குறித்துச் செயற்குழு முன்வைத்த விடயங்களைக் கருத்திற்கொண்டு யோசனைகளை வழங்கியுள்ளோம்.
தற்போது இளைஞர் பிரதிநிதித்துவம் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது. அது தொடர்பிலும் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி ஆணைக்குழுவின் யோசனைகளை முன்வைப்போம்.
செயற்குழுவின் காலத்தை மேலும் நீட்டிக்காமல், எதிர்வரும் மாதத்துக்குள் தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.