இலங்கையில் சினிமாவை மிஞ்சிய கொள்ளை - 60 மில்லியன் மோசடி செய்த இளைஞன்
தனியார் நிறுவனம் ஒன்றில் 59.65 மில்லியன் ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞனை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த சந்தேகநபர், நிறுவனத்தின் கணினித் தரவு அமைப்பில் போலித் தகவல்களை உள்ளீடு செய்துள்ளார்.
இதன் மூலம், 59,656,496.84 ரூபாய் தொகையை மோசடியாகப் பல்வேறு கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிதி மோசடி
நம்பிக்கை மோசடி, நிதி மோசடி மற்றும் குற்றவியல் ரீதியாக நிதியை தவறாக பயன்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை தொடர்ந்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியது.
அதற்கமைய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்கப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று நேற்று சந்தேகநபரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் மாளிகாவத்தையைச் சேர்ந்த 30 வயதுடையவர் என்பதுடன், இச்சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.