நள்ளிரவில் பெண்ணொருவரின் வீட்டுக்குள் நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணி நீக்கம்
மொரட்டுமுல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், நள்ளிரவில் ஜன்னல் வழியாக பெண் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பெண்ணுடன் முறையற்ற தொடர்பு
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணுடன் முறையற்ற தொடர்பை பேணி வந்ததாகவும், சம்பவத்தன்று அப்பெண்ணின் அழைப்பின் பேரில் வீட்டின் ஜன்னல் வழியாகப் நுழைந்து அவரது அறைக்குள் புகுந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, இரவு நேரத்தில் கேட்ட சத்தத்தினால் விழித்துக்கொண்ட பெண்ணின் மகள், அறையின் மின்விளக்குகளை ஒளிரச்செய்து பார்த்தபோது தனது தாயுடன் ஆண் ஒருவர் இருப்பதை கண்டுள்ளார்.
அவரை அடையாளம் கண்டுகொண்டபோது, அவர் மொரட்டுமுல்ல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என்பது தெரியவந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த மகள்
இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த மகள், தனது கையடக்கத் தொலைபேசியில் குறித்த சம்பவத்தை காணொளியாகப் பதிவு செய்துள்ளார்.
இதன்பின்னர், அந்தக் காணொளியுடன் மொரட்டுமுல்ல பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடும் செய்துள்ளார்.
பதிவுசெய்யப்பட்ட காணொளியையும் ஆதாரமாகப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். . இந்தச் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக குணசேகரவின் அறிவுறுத்தலின் பேரில் மொரட்டுவ உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சி.பி.எம். விக்கிரமசிங்கவினால் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒக்டோபர் 27ஆம் திகதி முதல் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அவமானகரமான நடத்தை (Disgraceful Conduct)என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.