வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் - தமிழர் பகுதிகளில் அனுஷ்டிப்பு
1990ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு, இன்று(30.10.2026) யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஏற்பாட்டில், “மறுக்கப்பட்ட உரிமைகள், மீள்குடியேற்றம், நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒருங்கிணைந்த அழைப்பு” எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
36 ஆண்டுகள் நிறைவு
யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஒருங்கிணைப்பாளர் ஏ.சி. மஹானாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் - கிளிநொச்சி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.எம். அப்துல் அஸீஸின் கிராஅத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது, வடக்கு முஸ்லிம் மக்களின் பலவந்த வெளியேற்றத்தின் 36ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பொதுப் பிரகடனத்தை, யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரும் யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் செயலாளருமான என்.எம். அப்துல்லாஹ் முன்வைத்துள்ளார்.
கலந்துரையாடலில் பங்கேற்றவர்களின் அங்கீகாரத்துடன் ஊடகங்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட இந்த பிரகடனத்தில் ஆறு முக்கிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. வடக்கு மாகாணம் முஸ்லிம் மக்களின் பூர்வீகத் தாயகமாகும் என்பதையும், அவர்களின் வாழ்வுரிமை, மத, கலாசார மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் பிரகடனம் வலியுறுத்தியுள்ளது.

1990ஆம் ஆண்டு இடம்பெற்ற பலவந்த வெளியேற்றத்தின் அநீதியை அங்கீகரித்து, அதன் வரலாற்றையும் பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவங்களையும் ஆவணப்படுத்துவதுடன், பொறுப்புக்கூறல், உரிய இழப்பீடு மற்றும் பரிகாரங்களை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
மேற்படி நினைவேந்தல் நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ஆர்.எப். றிஸ்லா, யாழ்ப்பாணம் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், உலமாக்கள், வர்த்தகப் பிரமுகர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்கள்
வடமாகாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்பின் 36 ஆம் ஆண்டு "கருப்பு ஒக்டோபர்" நினைவேந்தல் நிகழ்வு நேற்று(30.10.2026) யாழ்ப்பாணத்தில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அதிபர் ஹாமீம் கல்வி நிலையத்தில் மாலை 4.00 மணிக்கு ஆரம்பமான இந்த நினைவேந்தல் நிகழ்வு, யாழ் சகோதரத்துவ அமைப்பின் ஸரபுல் அனான் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வடமாகாணத்திலிருந்து, குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் தமது பூர்வீக சொந்த இடங்களை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
யாழ் முஸ்லிம்களின் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டு, கடத்தல்கள் மற்றும் படுகொலைகளுக்கு மத்தியில் இடம்பெற்ற இந்த இனச்சுத்திகரிப்பின் துயர வடுவிற்கு இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
மேலதிக தகவல் - சிஹான் பாரூக்