2027 வரவு செலவுத் திட்டத்தில் அதிரடி வரிக்குறைப்பு! ஜனாதிபதி அநுர வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மேலும் சில வரிகளைக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த வரிக் குறைப்புகள் அரசாங்கத்தின் வருமான இலக்குகளைப் பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய வரி
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தாம் ஆட்சிக்கு வந்த பின்னர் எந்தவொரு புதிய வரியையும் அறிமுகப்படுத்தவில்லை என்றும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த சில வரிகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சில வரிகள் மேலும் குறைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
கடந்த கால அரசாங்கங்கள் தமது வருமான இலக்குகளை அடைவதில் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தில் சுமார் 90 சதவீதத்தையே அவை பெற்றுக்கொண்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பணவீக்க அதிகரிப்பு
ஆனால், தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்குகளைத் தாண்டி வருமானத்தைப் பெற்றுள்ளதாகவும், முதன்மை வரவு செலவுத் திட்ட உபரியைப் பேணுவதன் மூலம் நாட்டின் கடன் சுமையைக் காலப்போக்கில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பணவீக்க அதிகரிப்பு காரணமாகப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்து, குடும்பங்கள் மேலதிக பொருளாதாரச் சுமைகளை எதிர்கொள்வதையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் சர்வதேச விநியோகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள தடங்கல்களே பணவீக்க அழுத்தங்களுக்குப் பிரதான காரணங்களாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.