மஞ்சள் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு லிட்ரோ எரிவாயு..! வெளியாகவுள்ள முக்கிய தீர்மானம்
உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிவாயு தட்டுப்பாடு காரணமாக லாக்ஃப்ஸ் எரிவாயு உருளைகளை லிட்ரோ எரிவாயுவால் நிரப்ப அனுமதி வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவின் தலைமையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஒரு முக்கிய கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
சந்தையில் எரிவாயு பற்றாக்குறை
சந்தையில் சமீபத்தில் ஏற்பட்ட எரிவாயு பற்றாக்குறை குறித்து கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், லிட்ரோ நிறுவனம் வழக்கமாக ஒரு நாளைக்கு 80,000 12.5 கிலோ எரிவாயு உருளைகளை சந்தைக்கு வெளியிடும் நிலையில், கடந்த வாரம் மாலைத்தீவிலிருந்து எரிவாயுவை ஏற்றி வந்த கப்பல் மூன்று நாட்கள் தாமதமாக வந்ததால், சுமார் 240,000 உருளைகளுக்கு தற்காலிக பற்றாக்குறை ஏற்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், 3,600 மெட்ரிக் டொன் எடை கொண்ட கப்பல் நாட்டிற்கு வந்த பிறகு, பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் தினசரி விநியோகத்தை 100,000 சிலிண்டர்களாக லிட்ரோ நிறுவனம் அதிகரித்துள்ளது.
சந்தையில் நிலவும் உண்மையான நெருக்கடி லிட்ரோவின் விநியோகத்தில் இல்லை என்றும், மாறாக நாட்டின் எரிவாயு சந்தையில் 20% பங்கைக் கொண்டுள்ள லாக்ஃப்ஸ் நிறுவனம், கடந்த இரண்டு மாதங்களாக சந்தைக்கு போதுமான எரிவாயுவை வெளியிடவில்லை என்பதே காரணம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, நுகர்வோர் விவகார ஆணையம் மூலம் லாக்ஃப்ஸ் நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, விநியோகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய நிறுவனத்திற்கு அனுமதி
லாக்ஃப்ஸ் நிறுவனத்தால் விநியோகம் செய்ய முடியாத பட்சத்தில், லிட்ரோ மூலம் தங்கள் சிலிண்டர்களுக்கான எரிவாயுவை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தான் விசாரித்த போதிலும், லாக்ஃப்ஸ் நிறுவனம் இதுவரை உறுதியான பதில் அளிக்கவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

லாஃப்ஸ் நிறுவனம் தனது உற்பத்தியில் 80%-ஐ ஏற்றுமதி செய்யவும், 20%-ஐ உள்ளூர் சந்தைக்கு வழங்கும் என்ற நோக்கத்துடன் இலங்கையில் தனது வணிகத்தைத் தொடங்கியுள்ளது.
தற்போது அவர்கள் அந்த 20%-ஐ உள்ளூர் சந்தைக்கு முறையாக வழங்காமலும், எந்த ஏற்றுமதி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமலும் உள்ளனர் என்று பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்றுமதி சலுகைகளைப் பெற்ற ஒரு நிறுவனம் நாட்டிற்குள் மட்டும் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட முடியாது என்றும், அவர்களின் விநியோகங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டால், லிட்ரோ நிறுவனத்தால் முழு சந்தையையும் பூர்த்தி செய்ய முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் என்றும், தேவைப்பட்டால், எதிர்காலத்தில் ஒரு புதிய நிறுவனத்திற்கு சந்தையை திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.