ஜி7 உச்சிமாநாட்டிற்கு எதிராக ஜெனிவாவில் தீவிரமடையும் போராட்டங்கள்
பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் நாளை ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறவிருக்கும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று(15.6.2026) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள் மற்றும் பாலஸ்தீன உரிமை ஆதரவாளர்கள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட அமைப்புகளைக் கொண்ட "நோ-ஜி7" கூட்டமைப்பால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிற உலகத் தலைவர்களின் கொள்கைகள் உலகிற்கு அச்சுறுத்தலாகவும், ஏழைகளை மேலும் ஏழைகளாக்கும் வகையிலும் இருப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
போராட்டங்கள்
மாநாட்டின் பாதுகாப்பிற்காக சுவிஸ் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் ஆயிரக்கணக்கான பொலீசாரை குவித்துள்ளதோடு, 2003-ஆம் ஆண்டு ஏவியன் மாநாட்டின் போது ஏற்பட்ட வன்முறைச் சேதங்களை மனதில் கொண்டு ஜெனிவாவின் பல வணிக நிறுவனங்கள் தங்களது கடைகளின் முகப்புகளை மரப்பலகைகளால் மூடிப் பாதுகாத்துள்ளனர்.

அமெரிக்கா, கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் அடங்கிய ஜி7 அமைப்பின் உலகளாவிய பொருளாதாரப் பங்கு 70 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைந்துள்ள நிலையில், அதன் உலகளாவிய அங்கீகாரம் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.
அதே வேளையில், இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு தனது உறுப்பினர்களின் எண்ணிக்கையை 11 ஆக உயர்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
காலநிலை நெருக்கடி, வரி விதிப்புகள் மற்றும் ஈரான் மீதான போர்ச் சூழல் போன்ற விவகாரங்களில் டொனால்ட் ட்ரம்பின் தலைமைத்துவத்திற்கு எதிராக உலகளவில் நிலவும் அதிருப்திக்கு மத்தியிலேயே இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.