முல்லைத்தீவில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம் முன்னெடுப்பு
முல்லைத்தீவு (Mullaitivu) கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தக் கோரி முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று (10) இடம்பெற்றுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களது பிரச்சினை
இந்நிலையில், அரசாங்க அதிபர் கருத்து வெளியிடுகையில் கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகளை நாம் அறிவோம். விரைவில் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
நேற்று முன்தினம் கிழக்கு மாகாண கடற்படை அதிகாரி மற்றும் உதவிப் பணிப்பாளர் சட்டவிரோத கடற்றொழிலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடியுள்ளதோடு இது தொடர்பான 3ஆவது கூட்டம் தொடர்பாக கடற்தொழில் அமைச்சரிடம் கேட்டுள்ளோம்.
மேலும் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலர் பங்கேற்பு
இந்த போராட்டத்தில் கடல் வளத்தை பாதுகாக்க வேண்டிய அரசே ஏன் கடல் வளத்தை சுரண்ட துணை நிக்கிறாய், கடற்படையினரே சட்டவிரோத வெளிச்சம் உன் கண்களுக்கு தெரியவில்லையா, அரசே சட்டவிரோத தொழிலுக்கு துணைபோகாதே போன்ற பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லதுரை நற்குணம், யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சம்மேளன உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் மற்றும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள், முல்லைத்தீவு மாவட்ட சம்மேளன மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |