யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சஜித்
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி கொற்றாவத்தை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் (Sajith Premadasa) திறன் விருத்தி வகுப்பறை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது, இன்று (10.07.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, திறன் விருத்தி வகுப்பறையை திறந்து வைப்பதற்காக வருகை தந்த சஜித் பிரேமதாசவின் தலைமையிலான குழுவினர் வெற்றிலை கொடுக்கப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளனர்.
கலந்து கொண்டோர்
மேலும், திறன் விருத்தி தொலைக்காட்சி மற்றும் 5 கணனிகள் என்பன பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர், வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
அது மாத்திரமன்றி, சஜித் பிரேமதாசவின் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் 228 ஆவது கட்ட நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்துகொண்டுள்ளார்.
உடுப்பிட்டி மகளிர் கல்லூரி
அதேவேளை, உடுப்பிட்டி மகளிர் கல்லூரியிலும் திறன் விருத்தி வகுப்பறையை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச திறந்து வைத்துள்ளார்.
இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியால் அமைத்துக் கொடுக்கப்பட்ட திறன் விருத்தி வகுப்பறை தொலைக்காட்சி மற்றும் 5 கணினிகளுடன் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ். ஆயர் இல்லம்
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று காலை யாழ்.ஆயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இச்சந்திப்பில் யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது, இவருடன் மறைக்கோட்ட முதல்வர்கள், அருட்தந்தையர்கள் ஆகியோரும் எதிர்க்கட்சி தலைவருடன் சந்தித்து கலந்துரையாடினர்.
மேலும், 13ஆவது திருத்தம், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, பொது வேட்பாளர் தெரிவு போன்ற அருட்தந்தையர்களின் வினாக்களுக்கு எதிர்க்கட்சித்தலைவர் கருத்துக்கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |