விசேட சலுகைகள் இடைநிறுத்தம் - நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் போராட்டம்
அரச மருத்துவர்களின் சம்பளக் குறைப்பு மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை
இதற்கமைய, அம்பாறை பொது மருத்துவமனைக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்குக் கிளையினால் இன்று(05.11.2026) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரச மருத்துவர்களுக்கு அண்மைய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பளக் குறைப்பை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும், மருத்துவர்கள் சந்தித்து வரும் ஏனைய தொழில்சார் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.
காத்திரமான தீர்வு
இந்தப் போராட்டத்தில் அம்பாறை மாவட்டப் பொது மருத்துவமனை மருத்துவர்கள் மட்டுமன்றி, தெஹியத்தகண்டிய, மஹாஓயா , பதியத்தலாவை உள்ளிட்ட அருகிலுள்ள பல பிரதேச மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்களும் திரளாகக் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வெளியிட்டனர்.

சம்பளக் குறைப்பு மற்றும் சலுகைகள் பறிக்கப்பட்டமையினால் மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருவதாகவும், இதற்குக் காத்திரமான தீர்வு கிடைக்கப்பெறாவிடின் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த நேரிடும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இதன்போது எச்சரித்தனர்.
பருத்தித்துறை
DAT கொடுப்பனவை மீளாய்வு செய்து அதிகரிக்கவும், விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவில் மூன்றில் ஒரு பகுதியை உடனடியாக வழங்கவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, இன்று(05.11.2026) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் முன்பாக இடம்பெற்றுள்ளது.

வைத்தியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த போதிலும் மக்களுக்கான மருத்துவ சேவை தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - எறிமலை



