கலந்துரையாடலுக்கு வர தவறினால் போராட்டம் தொடரும்: வி.எஸ்.சிவகரன் தெரிவிப்பு
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளனர், ஒரு ஜனநாயக நாட்டில் உரிமை கேட்டு போராடுவது தவறா என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று (28) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தொடர் கலந்துரையாடல்கள்
மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பல்வேறு விதமான போராட்டங்களும், கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், கடந்த மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அமைச்சர்களுடனான சந்திப்பு, 13ஆம் திகதி ஜனாதிபதியுடனான சந்திப்பு என்பவற்றுக்கு பின் ஒரு மாத காலம் இதற்கான பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இதனை தொடர்ந்து மாவட்டத்தில் இயங்குகின்ற அமைப்புக்களுடனான கலந்துரையாடல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்புக்களுடன் 5 இடங்களில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து வருகை தந்த விசேட குழுக்களிடம் அமைப்புக்கள் ஊடாக கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இவற்றை எல்லாம் பெற்றுக்கொண்டவர்கள், நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவது போல் ஜனாதிபதியினுடைய செயலாளர் கடந்த 22ஆம் திகதி மின்சக்தி அமைச்சிற்கு கடிதம் எழுதியுள்ளார். 14 காற்றாலைகளுக்கான பணிகளையும் ஆரம்பிக்குமாறு.
சர்வதிகாரத்தின் உச்சம்
அன்றைய தினமே மின் சக்தி அமைச்சின் செயலாளர் மன்னார் மாவட்ட செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆகவே நீதிமன்றத்தின் தீர்ப்பு போல் மக்கள் மன்றங்களின் விவகாரங்களை அரசு கையாள நினைப்பது சர்வதிகாரத்தின் அதி உச்சமாக நாங்கள் பார்க்கின்றோம்.
ஏனெனில் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாதங்களைக் கேட்டு உணர்ந்தவர்கள் அந்த மக்களுடன் மீண்டும் கலந்தரையாடியே அந்த தீர்மானத்திற்கு அவர்கள் வந்திருக்க வேண்டும். நீங்கள் சொல்வதை சொல்லுங்கள். நாங்கள் நினைப்பதை தான் செய்வோம் என்றால் அரசு முற்று முழுதாக சர்வாதிகாரமாக தான் செயல்படுகிறதா?
மக்களுடைய அடிப்படை கோட்பாட்டில் இருந்து விலகி கடந்த கால அரசாங்கங்கள் மக்களுக்கு எதிராக சமூகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கையில் எடுத்ததோ, அதே விடயத்தை அநுரவின் அரசும் முன்னெடுக்கின்றதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



