மன்னார் காற்றாலை விவகாரம்: முன்னைய ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட அனுமதி - அம்பலப்படுத்தும் அமைச்சர்
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி விவகாரத்தில் முன்னைய ஆட்சியாளர்களால் அனுமதி கொடுக்கப்பட்டு இன்று அனைத்து வேலைகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட முன்பள்ளி கல்விக்கூடங்கள் பற்றிய கருத்தரங்கு ஒன்று நேற்று (27) மன்னார் மாவட்ட மாவட்ட செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் பங்கேற்றதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரன், மன்னார் நகரசபை தவிசாளர் டானியல் வசந்தன், நானாட்டன் பிரதேசசபை தவிசாளர் அன்றூ, நானாட்டான் பிரதேச செயலளர் சி.கனகாம்பிகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கோரிக்கை முன்வைப்பு
இந்த நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு கடற்தொழில் அமைச்சரிடம் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று காற்றாலை மின் உற்பத்தி அமைப்பது தொடர்பிலான பிரச்சினை ஒரு பூதகரமான பிரச்சினையாக மாறியுள்ளது என்பது உண்மை. அது தொடர்பில் ஜனாதிபதியுடன் பல சுற்று பேச்சுக்கள் நடத்தப்பட்டது என்பதும் உண்மை.
அது தொடர்பில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதும் உண்மை. இருந்தும் இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை.
அனுமதி மறுக்கப்பட்டால் விளைவு
முன்னைய ஆட்சியாளர்களால் அனுமதி கொடுக்கப்பட்டு இன்று அனைத்து வேலைகளும் செய்து முடிக்கப்பட்ட தருவாயில் இன்று அனுமதி மறுக்கப்படுமாக இருந்தல் இந்த விரயங்களுக்கான கோடி மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தினை மீண்டும் அரசாங்கம் ஊடாக அந்த நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிவரும்.
இதனால் இங்கிருக்கின்ற மக்களிடம் நாங்கள் வினையமாக கேட்டுக்கொள்கின்ற விடயம் என்னவென்றால் காற்றாலை ஊடாக மன்னாருக்கு பாதிப்பு வருமாக இருந்தால், மன்னார் மண்ணுக்கு பாதிப்பு வருமாக இருந்தால் அதற்கான அனுமதியினை நாங்கள் கொடுக்கப்போவதில்லை.
அந்தவகையில் எல்லாவகையிலும் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலமாக எங்களுக்கு தெரிகின்றது அவ்வாறான பாதிப்பு இல்லை என்ற உண்மை என குறிப்பிட்டுள்ளார்.











