ஆக்கிரமிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை நிறுத்தக் கோரி அம்பாறை கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அம்பாறை - கல்முனை மற்றும் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதக் கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக் கோரி அப்பகுதி கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(28.11.2026) இடம்பெற்றுள்ளது.
கடற்கரை வீதியை அண்டிய கரையோரப் பகுதியில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் முறையற்ற கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் காரணமாகத் தமது பாரம்பரிய மீன்பிடித் தொழிலை முன்னெடுப்பதற்கும், மீன்பிடிப் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடற்றொழிலாளர்களின் கோரிக்கை
கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திணைக்களம் கடற்கரைப் பகுதியைச் சீரமைத்து அழகுபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை எவ்விதக் காலதாமதமுமின்றி அகற்றி, கடற்கரையைப் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான சூழலாக மாற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை, கடற்கரைப் பகுதியின் சுற்றுச்சூழலையும் பொதுச் சொத்துக்களையும் பாதுகாக்கும் இத்தகைய அபிவிருத்தி மற்றும் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் சட்டரீதியாகவும் மனிதாபிமான அடிப்படையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் இதனால் பாதிக்கப்படும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்கு முறையான மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.