வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு - பொல்துவ சந்தியில் மாபெரும் போராட்டம் ஏற்பாடு
எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி பொல்துவ சந்தியில் மாபெரும் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வித் தொழில்வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இவ்வாறு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் கல்வி அமைச்சின் செலவினத் தலைப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமையால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குறுதி
கல்விக்காக ஆறு சதவீதத்தை ஒதுக்குவதாக வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலேயே தற்போதைய பிரதமர் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்ததாகச் சுட்டிக்காட்டிய உலப்பனே சுமங்கல தேரர், ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளாரா என்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், முதலாம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தைத் தொடர்ந்து தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் உலப்பனே சுமங்கல தேரர் வலியுறுத்தினார்.
இதேவேளை, 2027 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களுடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை எனப் பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கடந்த 18ஆம் திகதி போராட்டமொன்றை முன்னெடுத்ததாகவும், 25ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று தமது பிரச்சினைகள் அடங்கிய மனுவொன்ற கையளித்ததாகவும் அதன் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த குறிப்பிட்டார்.
நெருக்கடியான நிலைமை
அத்துடன், குறித்த பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் நெருக்கடியான நிலைமையொன்று உருவாகும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, அனைத்துத் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்கச் சுதந்திரத் தொழிற்சங்க நிலையம் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் ஆக்கபூர்வமான பதிலை வழங்குவதற்குப் பதிலாக அச்சுறுத்தும் பாணியில் செயற்படுவதாகவும், தொழிலாளர் மக்களின் உரிமைகளுக்காக முன்வரும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக அழுத்தங்களைப் பிரயோகிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், ஆசிரியர்களால் நவம்பர் 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ள போராட்ட நடவடிக்கை தீர்க்கமானதாக அமையும் என்பதுடன், அந்த நடவடிக்கையை வெற்றியடையச் செய்வதற்குச் சுதந்திரத் தொழிற்சங்க நிலையத்தின் பூரண ஆதரவு வழங்கப்படும் எனவும் சிறிதுங்க ஜயசூரிய வலியுறுத்தினார்.