உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள விசேட எச்சரிக்கை
தனிநபர் அடையாள இலக்கம் (PIN) மற்றும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) ஆகியவற்றை வழங்குவதற்காக, நாளை (28) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (29) ஆகிய நாட்களில் தமது அனைத்துப் பிராந்திய அலுவலகங்களும் திறந்திருக்கும் எனப் பரவும் போலி அறிவிப்பை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொதுமக்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பொதுமக்கள் மத்தியில் பகிரப்பட்டு வரும் குறித்த அறிவிப்பு திணைக்களத்தினால் வெளியிடப்படவில்லை எனவும், அது முற்றிலும் போலியானது எனவும் அத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கான இறுதித் திகதியான நவம்பர் 30 ஆம் திகதியை முன்னிட்டு, பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் ஒரு குழுவினர் திட்டமிட்டு இந்தப் போலி அறிவிப்பைத் தயாரித்துப் பரப்பியிருக்கலாம் எனத் திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு, இதற்குப் பொறுப்பானவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனவே, அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்புகளை நம்பாமல், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் அல்லது 1944 என்ற அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாகச் சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Bigg Boss 10: கண்ணீருடன் உள்ளே வந்த முனியம்மாவிற்கு கொடுத்த முத்தம்! வெட்கத்தில் லக்ஷ்மி பிரியா Manithan