கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் நடந்த கொடூரம் - தாயை காப்பாற்ற போராடிய மகளுக்கு நேர்ந்த துயரம்
கொழும்பில் நோய்வாய்ப்பட்ட தாயை காப்பாற்றும் நோக்கத்துடன் தனியார் வைத்தியசாலையை நாடிய மகள் தாயை இழந்த சோகத்திற்கு மத்தியில் பாரிய சட்டச் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் தாய் மரணமடைந்ததை அடுத்து, எஞ்சியிருந்த கட்டணத் தொகை காரணமாக வைத்தியசாலை தரப்பு பெண் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் சிக்கிய ராஜகருணா என்ற பெண்ணை, 5 லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு மாளிகாகந்த நீதிவான் ஜனிதா ரோஷணீ அபேவிக்ரம நேற்று உத்தரவிட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை
ராஜகிரிய, நாவல பகுதியை சேர்ந்த லீலானி சுனேத்ரா என்ற பெண் சுகயீனமடைந்துள்ளார். இந்த நிலையில் அவரை கொழும்பு நோரிஸ் கெனல் வீதியில் அமைந்துள்ள முன்னணி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்க மகள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 27 முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை சுமார் ஒன்றரை மாத காலப்பகுதியில் குறித்த வைத்தியசாலையால் சமர்ப்பிக்கப்பட்ட மொத்தக் கட்டணம் 22,406,313 ரூபாயை தாண்டியிருந்தது.
வைத்தியசாலையால் வழங்கப்பட்ட 10 லட்சம் தள்ளுபடியைத் தவிர, மகள் தனது தாய்க்காக 11,800,000 ரூபாய்க்கும் அதிகமான பெரும் தொகையை வைத்தியசாலைக்கு செலுத்தியுள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தாய் இறுதியில் உயிரிழந்ததுடன், செலுத்துவதற்கு எஞ்சியிருந்த ஒரு கோடி 6 லட்சத்திற்கும் அதிகமான பணம் காரணமாக தாயை இழந்த மகளுக்கு எதிராக வஞ்சகமான முறையில் பணத்தை மோசடி செய்தல் என்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர வைத்தியசாலை தரப்பு நடவடிக்கை எடுத்தது.
பிரேத பரிசோதனை
தாயின் இழப்பால் கடும் அதிர்ச்சியடைந்த மகள் கட்டணத்தின் மீதிப் பகுதியை செலுத்தத் தவறியமை காரணமாகத் தாயின் பூதவுடலை இறுதிக் கிரிகைகளுக்காக வழங்குவதற்கு வைத்தியசாலை மறுத்துள்ளது.

2 நாட்களாகத் தாயின் பூதவுடல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரை நாடவேண்டிய நிலை மகளுக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், மாளிகாகந்த பதில் நீதிவான் பிரேமலால் அத்துக்கோரள, உடனடியாகப் பிரேத பரிசோதனை ஒன்றை நடத்தி பூதவுடலை மகளிடம் வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மோசமடையும் ஷிரந்தியின் உடல்நிலை! பெரும் கவலையில் நாமல் மற்றும் குடும்பத்தினர்: பின்னணியில் தீவிர சட்ட ஆலோசனை