கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு 389 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (25) குறித்த கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது. இதில் 4 பெண் கைதிகளும் 385 ஆண் கைதிகளும் உள்ளடங்குகின்றனர்.
குற்றச் செயல்கள்
நாடு முழுவதிலும் அமைந்துள்ள பல்வேறு சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
[]
போதைப் பொருள், திட்டமிட்ட குற்றச் செயல்கள் உள்ளிட்ட பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்புபடாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.
குறிப்பாக சிறு குற்றச் செயல்களுக்கு அபராதம் செலுத்த முடியாது தண்டனை அனுபவித்து வரும் கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இதேவேளை, இன்றைய தினம் சிறைச்சாலை கைதிகளை பார்வையிடுவதற்கும் கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 12 ஆண் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
செய்தி - பவன்
வவுனியா
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 பேர் விடுவிக்கப்பட்டனர்.
மேலும், விளக்கமறியல் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி புத்திக பெரெரா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
செய்தி - திலீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |