மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் டிசம்பரில் பங்களாதேஷ் திரும்ப முன்னாள் பிரதமர் திட்டம்
பங்களாதேஷில் கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மாணவர் புரட்சியைத் தொடர்ந்து இந்தியாவில் அகதியாக தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (78) தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் வரும் டிசம்பர் மாதம் மீண்டும் பங்களாதேஷ் திரும்பத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்டுள்ள தனது 'அவாமி லீக்' கட்சியின் சட்டப்பூர்வ உரிமைகளை மீட்டெடுப்பதற்காக, கட்சியைச் சேர்ந்த பிற முக்கியத் தலைவர்களுடன் இணைந்து தான் தாய்நாடு திரும்பவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி
அவர்கள் என்னைக் கைது செய்யலாம் அல்லது கொல்லவும் செய்யலாம், ஆனால் மரணம் என்று ஒன்று வந்தால் அது எனது சொந்த மண்ணில்தான் நிகழ வேண்டும்.

நாங்கள் அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி இந்த போலி சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வோம் என்று புதுடில்லியிலிருந்து தொலைபேசி வழியாக ஷேக் ஹசீனா பேசியுள்ளார்.
பங்களாதேஷில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதமராக இருந்து வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பல சாதனைகளைப் படைத்திருந்தாலும், அவரது இறுதிக்கால சர்வாதிகாரப் போக்கு மற்றும் போராட்டக்காரர்கள் மீதான கொடூரமான ஒடுக்குமுறைகள் காரணமாக அவர் மக்கள் எதிர்ப்பைச் சந்தித்து நாட்டை விட்டு ஓடினார்.
இந்தியா-பங்களாதேஷ்
தற்போது பங்களாதேஷில் தாரிக் ரஹ்மான் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், ஷேக் ஹசீனாவைத் தங்களுக்குக் கைமாற்றித் தருமாறு இந்தியாவிடம் பங்களாதேஷ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இது இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியாக பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருந்த வேளையில், ஹசீனாவின் இந்தச் சுயவிருப்பத்திலான மறுவருகை முடிவு இந்தியா-பங்களாதேஷ் இடையிலான எல்லையோரப் பதற்றத்தைத் தணிக்க உதவலாம் எனக் கருதப்படுகிறது.
இருப்பினும், "அவாமி லீக் கட்சி டில்லியோடு புதைக்கப்பட்டுவிட்டது, இந்தத் திரள் கொலைகாரருக்கு இன்னும் கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லை" என்று பங்களாதேஷின் தற்போதைய உள்துறை அமைச்சர் சலாவுதீன் அகமது மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.