நரேந்திர மோடியை வாழ்த்திய பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தானின் பிரதமர் செபாஸ் செரீப் (Muhammad Shahbaz Sharif) மற்றும் அவருடைய மூத்த சகோதரரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான நவாஸ் செரீப் ஆகியோர் அனுப்பிய வாழ்த்து செய்திகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) பதிலளித்துள்ளார்.
வெறுப்பை நம்பிக்கையுடன் மாற்றி தெற்காசியாவின் இரண்டு பில்லியன் மக்களின் விதியை வடிவமைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவோம் என்று நவாஸ் செரீப் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள இந்தியப் பிரதமர், இந்தியா அமைதியையும் முன்னேற்றத்தையும் விரும்பும் அதே வேளையில், இந்திய மக்களின் பாதுகாப்பு எப்போதும் இந்தியாவின் முன்னுரிமையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் நிலைப்பாடு
மோடியின் கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், வாழ்த்து செய்தியை அனுப்புவதில் பாகிஸ்தான் இதுவரை விலகியிருந்தது,
மோடி பதவியேற்கும் முன்னர் அத்தகைய செய்தியை அனுப்புவது பற்றி பேசுவது முன்கூட்டிய செயலாகும் என்று பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மோடி நேற்று பிரதமராக பதவியேற்ற பின்னர் இன்று பாகிஸ்தானிய பிரதமரும் அவரின் சகோதரரும் பிரதமருக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், நவாஸ் செரீப்பிற்கு மோடியின் பதில், இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டைக் குறிக்கிறது,
சுட்டிக்காட்டப்படும் விடயம்
இரு தரப்பினரும் பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் பயங்கரவாதத்தின் நிழலின் கீழ் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பதை சுட்டிக்காட்டுவதாக இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது.
2014ஆம் ஆண்டில் மோடியின் முதல் பதவியேற்புக்கு அழைக்கப்பட்ட நாடுகளில் பாகிஸ்தானும் உள்ளடங்கியிருந்தது. அதன்போது நவாஸ் செரீப் அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.
இதேவேளை, மோடியின் பதவியேற்பு குறித்து சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் உட்பட உயர் தலைமையிலிருந்து இந்திய தரப்புக்கு எந்த செய்தியும் இதுவரை கிடைக்கவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |