இலங்கையின் விவசாய துறைக்கு ஆதரவு தரவுள்ள பங்களாதேஷ்
இலங்கையில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களாதேஷ் ஆதரவளிக்கும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickramasinghe) பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) உறுதியளித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) பதவிப் பிரமாண வைபவத்துக்காக புதுடில்லி சென்ற இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (10.06.2024) காலை நடைபெற்றுள்ளது.
இதன்போதே பங்களாதேஷ் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பயணிகள் படகு சேவை
கூட்டுறவு முறையின் அடிப்படையில் பங்களாதேஷில் செயற்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை ஆராய்ந்து இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக இலங்கை விவசாயத்துறை நிபுணர்கள் குழுவொன்றை பங்களாதேஷிற்கு அனுப்புவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷிற்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடுவது குறித்தும் இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடியதோடு, இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்ததன் பின்னர் பங்களாதேஷுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பங்களாதேஷின் தனியார் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதாகவும் பங்களாதேஷ் பிரதமர், இலங்கை ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை மேற்கொள்வது குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார மீட்சி
இதேவேளை, பங்களாதேஷில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்குமாறு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பங்களாதேஷ் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் இலங்கையில் தேர்தல் நடைபெற இருப்பதால்,
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ஆகியோர்
மாநாட்டில் பங்குபற்றுவார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்னர் பங்களாதேஷுக்கு விஜயம் செய்வதாகவும் பங்களாதேஷ் பிரதமரிடம் இலங்கை ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இலங்கையின் பொருளாதாரத்தை மீளமைக்க முடிந்ததையிட்டு பெரு மகிழ்ச்சியடைவதாகத் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார மீட்சிக்கு பங்களாதேஷ் மற்றும் இந்தியாவிலிருந்து கிடைத்த ஆதரவை நினைவு கூர்ந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இரண்டு நட்பு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக பங்களாதேஷின் சுற்றுலாத் துறையில் இலங்கையின் முதலீட்டை பிரதமர் சேக்ஹசினா கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமது நாட்டுக்கு வருகைத்தருமாறு பங்களாதேஸ் ஜனாதிபதி, ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்த போது, பங்களாதேஷை பார்வையிட தனக்கு விருப்பம் இருப்பதாகக் கூறிய ரணில் விக்ரமசிங்க தனது நாட்டில் தேர்தல் நடத்தப்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல் - சிவா மயூரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |