பாஜக ஆட்சியில் நியமிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவை
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றிய நிலையில் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது.
என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் நாடாளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து நேற்று பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்றுள்ளார். அவருடன் 72 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
கூட்டணி கட்சிகளின் தயவில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்துள்ளதால் புதிய அமைச்சரவை குறித்த எதிர்பார்ப்புகள் ஆரம்பம் முதலே உச்சத்தில் இருந்தது.
அதிகபட்சமாக 78 முதல் 82 அமைச்சர்கள் வரை ஒரு அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று இருக்கும் சூழலில் தற்போது அமைத்துள்ள அமைச்சரவையில் 72 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
3 பேருக்கு மத்திய அமைச்சரவையில் இடம்
இதில் கவனிக்கத்தக்க வகையில் 13 அமைச்சர்கள் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக அந்த13 பேரில் 5 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். கர்நாடகாவில் பாஜக - குமாரசாமியின் ஜனதா தளம் கூட்டணி 28 இல் 19 இடங்களைப் பிடித்தது.
இதற்கிடையில் குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், பிரஹலாத் ஜோஷி, ஷோபனா கரண்த்லாஜே ஆகியோரும் அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பாஜக ஆட்சியமைக்க முக்கிய காரணமாக இருந்த சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 16 சீட்களும், பவன் கல்யாணின் ஜன சேனா 5 சீட்களும் வைத்துள்ளதால் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து இக்கட்சிகளை சேர்ந்த மொத்தம் 3 பேருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து முறையே தலா 2 அமைச்சர்கள் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து எல்.முருகன் மீண்டும் இணை அமைச்சர் ஆனார். அதிகபட்சமாக இந்த முறை பாஜக சறுக்கிய உத்தரபிரதேசத்தில் இருந்து 9 அமைச்சர்களும், அதனைத்தொடர்ந்து பீகாரில் இருந்து 8 அமைச்சர்களும் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
மொத்தமாக கூட்டணி கட்சிகளுக்கு 11 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சராக பதவியேற்றவர்களுள் 7 பேர் பெண்கள் ஆவர். மொத்தம் உள்ள 72 அமைச்சர்களில் 30 கேபினட் அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள், 5 தனிப் பொறுப்பு பதவி உடையோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் 61 அமைச்சர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 11 பேர் கூட்டணிக் கட்சிகளை சேர்த்தவர்கள் . மேலும் புதிய அமைச்சர்களில் 7 பேர் முன்னாள் முதலமைச்சர்கள் ஆவர். ஓபிசி வகுப்பு அமைச்சர் 27 பேரும், எஸ்.சி சமூக அமைச்சர்கள் 10 பேரும், எஸ்.டி சமூக அமைச்சர்கள் 7 பேரும் ஆவர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |