ஓரங்கட்டப்பட்ட மஹிந்த! - பிரதமரின் இணைப்பாளர் வெளியிட்ட தகவல்
அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஓரங்கட்டப்பட்டுள்ளதாக பிரதமரின் முஸ்லிம் விவகாரங்களுக்கான இணைப்பாளர் ஷிராஸ் யூனுஸ் தெரிவித்துள்ளார்.
இப்போது பிரதமர் வெறும் ஆடம்பரமான நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார். தனது பேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அண்மையில் புத்தளம் - அநுராதபுரம் வீதியில் கலா ஓயா பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது மஹிந்த ராஜபக்சவின் படத்தை தாக்கியதை பார்த்ததாகவும், இதனால் தான் மிகவும் வருத்தமடைந்ததாகவும் அவர் கூறினார்.
தன் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டதாகவும் அவர் கூறினார். மஹிந்த இந்த நாட்டை மீட்டெடுத்த நாயகன். அவருக்காகவே நாட்டு மக்கள் வாக்களித்து இந்த அரசாங்கத்தை கொண்டுவந்தனர்.
மஹிந்த என்ற ஒற்றை நபருக்காக மட்டுமே நாட்டு மக்கள் வாக்களித்தனர். இல்லையென்றால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்காது. மஹிந்த ராஜபக்ச யுத்தத்தை வெற்றிக்கொண்டதுடன், தேர்தல்களிலும் வெற்றிபெற்றார்.
எனினும், அவர் இன்று ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் எந்தத் தேர்தலிலும் தாமரை மொட்டு தோற்கடிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
