ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்த பிரச்சினைகளும் இல்லை:நிமல் சிறிபால டி சில்வா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில்,தொடர்புகள் இல்லை என்பதை காணக் கூடியதாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
தனித்தனியாக சந்திப்புகளை நடத்தும் ஜனாதிபதி மற்றும் பிரதமர்
ஜனாதிபதியும் பிரதமரும் அவ்வப்போது தனித்தனியாக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் விதத்திலேயே இவர்களுக்கு இடையில் தொடர்பு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
ரணில் விக்ரமசிங்க, பிரதமர் பதவியை பெற்றுக்கொண்டு கட்சி சார்பற்ற அரசாங்கத்தை அமைக்க அழைப்பு விடுத்தார்.
கட்சி சார்பற்ற அரசாங்கத்தினால், பிரச்சினைகள் தீராது என்பதால், சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைத்து, சர்வதேசத்தின் உதவியை பெற்று நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு அறிவித்தோம் எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
சில தீர்மானங்களையும் முடிவுகளையும் எடுக்கும் பேச்சுவார்த்தைகளை பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தனித்தனியாக கூட்டி இருந்ததாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இதனால், பிரதமரும் ஜனாதிபதியும் இணக்கப்பாட்டுடன் வேலை செய்கின்றனரா என்பது கேள்விக்குரியதாக இருப்பதாக எதிர்க்கட்சியின் அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியும் பிரதமரும் சிறப்பாக பணியாற்றுகின்றனர்
எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மைத்திரிபால சிறிசேனவுக்கு எவரோ தவறான தகவலை வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
ஜனாதிபதியும் பிரதமரும் மிக சிறப்பாக கலந்துரையாடி பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் சம்பந்தமாக நம்பிக்கையான நிலைமை இருப்பதாகவும் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.