ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம்: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு
அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து வருகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் சட்ட செயலாளர் ரஜித லக்மால் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில், "22ஆவது அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் உள்ளது.
நாட்டினுடைய பிரதான நிறைவேற்று அதிகாரியான ஜனாதிபதி மேடைகளில் ஏறி 'தீர்ப்பு வந்தவுடன் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவோம்' எனக் கூறுவது நீதிமன்றத்தின் மீது விடுக்கப்படும் நேரடி அழுத்தமாகும்.
அத்தியாவசிய மருந்துகள்
எழுதப்படாத ஒரு தீர்ப்பு குறித்து நாட்டின் ஜனாதிபதி பகிரங்கமாகப் பேசுவது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. இன்று நாட்டில் உள்ள பிரதான மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் எதுவும் இல்லை. ஆனால், ஜனாதிபதியோ மக்கள் வினோதத்துக்காக மருத்துவமனைக்குச் செல்கின்றார்.
வீடுகளிலேயே கொத்தமல்லி குடித்துவிட்டு இருக்குமாறும் கூறுகின்றார். மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை என்பதை மறைக்கவே ஜனாதிபதி இவ்வாறு கூறுகின்றாரா. இதன் காரணமாகவே மக்கள் அவரை இன்று 'கொத்தமல்லி ஜனாதிபதி' என விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், 2025 ஜனவரி மாதம் இடம்பெற்ற கொள்கலன் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தம் வசமிருந்தும் அதனை வெளிப்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர்.
போலி கலாநிதி பட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் சபாநாயகர் மீதோ அல்லது நிலக்கரி கொள்முதல் ஊழல்கள் மீதோ இதுவரை எவ்வித முறையான விசாரணைகளும் நடத்தப்படவில்லை.
அரச போலிப் பேரணி
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசு தவறியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்தவர்கள், இன்று அப்பாவி மக்களுக்கு எதிராக அதே சட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மக்களின் அதிருப்தியையும் சரிந்துவரும் செல்வாக்கையும் மறைக்கவே பஸ்கள் மூலம் ஆட்களைத் திரட்டி அரசு போலிப் பேரணிகளை நடத்தி வருகின்றது.
இந்த அரசுக்கு இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே அவகாசம் உள்ளது. அதற்குப் பிறகு மக்களால் இவர்கள் முற்றாக நிராகரிக்கப்படுவார்கள். எதிர்க்கட்சியாக நின்று மக்களுக்கான ஜனநாயகப் போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து முன்னெடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.