வலி. வடக்கில் ஒதுக்கப்பட்ட மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள் - மனுவில் முன்வைத்த குற்றச்சாட்டுகள்
வலி. வடக்கு காணி விடுவிப்புக்காக போராடும் மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள் அண்மையில் இடம்பெற்ற இரண்டு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
மயிலிட்டியில் காணி விடுவிப்புக்காக தொடர்ச்சியாக போராடிவரும் ஒரு பகுதி மக்கள் இன்றைய தினம்(11.09.2026) வெள்ளிக்கிழமை ஒன்று திரண்டு தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு சென்று குறித்த மனு கையளித்துள்ளனர்.
நிராகரிக்கப்பட்ட மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள்
இதன்போது, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தமது பிரதிநிதிகளையும் வழமையாக அழைத்து, காணி விடுவிப்பு உள்ளிட்ட தமது பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில் இடம்பெற்ற இரண்டு கூட்டங்களுக்கு தமது அமைப்பின் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால், காணிகளை இழந்த மக்களின் நியாயமான கோரிக்கைகள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு, தமது தரப்பு தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
எனவே, எதிர்வரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு தமது பிரதிநிதிகளுக்கும் மீண்டும் உரிய முறையில் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என மனு மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.