இலங்கை ஆட்சியாளர்களில் இனவாதத்தை தீவிரப்படுத்தியவர் ஜனாதிபதி கோட்டாபய: சபா குகதாஸ்
இலங்கை ஆட்சியாளர்களில் இனவாதத்தைத் தீவிரப்படுத்தியவர் ஜனாதிபதி கோட்டாபய என்று வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் மே19 தேசிய வீரர்கள் தின நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய கலந்து கொண்டு ஊடகங்கள் முன் உரையாற்றும் போது அமைதியான தாய் நாட்டில் இனவாதத்திற்கோ வேறு எந்த தீவிரவாதத்திற்கோ இடமில்லை என நாடு ஏதோ மிக அமைதியாக இருப்பது போல உரையாற்றினார்.
நாடு தீவிர இனவாதத்தின் விளைவை தற்போது அறுவடை செய்கிறது என்ற கசப்பான உண்மையைக் கூறத் தவறியுள்ளார். இலங்கை தீவில் 1948 ஆண்டுகளின் பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் அதிகாரத்தைப் பெற இனவாதத்தையே ஆயுதமாகக் கையில் எடுத்தனர்.
ஆரம்பத்தில் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க பிரதமராக வருவதற்குக் கையில் எடுத்தது தனிச் சிங்கள சட்டம்! அதேபோல் தற்போது ஜனாதிபதியாக உள்ள கோட்டாபயவும் ஒரே நாடு ஒரே சட்டம்!! என்ற இனவாத கோசத்தை முன்வைத்தார்.
பல்லினங்கள் வாழும் அழகிய இலங்கை தீவில் கடும் போக்குவாத பிரசாரத்தில் பௌத்த சிங்கள நாடு என்ற கோசத்தை முதன்மைப்படுத்தி கடந்தகால அரச தலைவர்களைவிடச் சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்கைப் பெற்ற ஒரே தலைவர் கோட்டாபய தான்.
ஆனால் இரண்டு ஆண்டுகளில் அதன் விளைவு மிகவும் கசப்பானதாக மாறியுள்ளது.
உலகில் பல்லினங்கள் வாழும் நாடுகளில் ஒற்றையாட்சி அரசியலமைப்பு நீக்கப்பட்டு சகல இனங்களையும் மதிக்கின்ற அதிகாரப் பகிர்வைக் கொண்ட சமஷ்டி அரசியலமைப்புக்களே காணப்படும் போது, விதி விலக்காக இலங்கையில் பிற்போக்குவாத சிந்தனை கொண்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பே இனவாதத்திற்குத் தீனி போட்டு வளர்ப்பதாக அமைந்துள்ளது.
நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லவும் தனி மனித அதிகார ஆசைகளைக் களையவும்
ஒற்றையாட்சி அரசியலமைப்பை மாற்றி சகல இனங்களுக்குமான அதிகாரப் பகிர்வை ஐக்கிய
இலங்கைக்குள் வழங்கக் கூடிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதன் மூலமே இனவாதத்தையும்
தீவிரவாதத்தையும் ஒழிக்க முடியும். அமைதியான தாய் நாட்டை கட்டியெழுப்ப முடியும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.