நீதிமன்றம் மீது ஜனாதிபதி அழுத்தம் கொடுக்கின்றாரா: முன்னாள் எம்.பி. ஜகத் குமார கேள்வி
22ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் நீதிமன்றம் தனது கருத்தை வெளியிடுவதற்கு முன்னரே, மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படாது என ஜனாதிபதி அறிவித்திருப்பது நாட்டின் நீதித்துறை அமைப்புக்குச் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய அவமதிப்பாகும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, "ஒருபுறம் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, மறுபுறம் ஜனாதிபதி பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான வகையில் நீதிமன்றத் தீர்ப்புகள் கிடைக்கும் எனக் கூறுகின்றார்.
நீதித்துறை
நீதிமன்றம் என்ன கூறப் போகின்றது என்பதை மக்கள் எதிர்பார்க்கும் நிலையில், தீர்ப்புக்கு முன்னரே ஜனாதிபதி முன்கூட்டியே கருத்து வெளியிடுவது நீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதியின் கைகளில் இருப்பதாக மக்கள் மத்தியில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும்.
நாட்டில் தேர்தல் எதுவும் நடைபெறாத நிலையில் ஜனாதிபதி மக்கள் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளார். இவ்வாறான அவசர மக்கள் சந்திப்புகள் மூலம் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. மாறாக, அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செல்வந்தர்களாகியுள்ள நிலையில், மக்கள் இரண்டு வேளை உணவைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.
22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாக எதிர்க்கட்சியை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, எதிர்வரும் தேர்தல்களை நடத்தாமல் இருப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இலவசமாக கிடைத்த மென்பொருளுக்கு 88 இலட்சம் செலவிட்ட தேசிய குருதி வங்கி.. இடம்பெற்றுள்ள பாரிய நிதிமோசடி