இலவசமாக கிடைத்த மென்பொருளுக்கு 88 இலட்சம் செலவிட்ட தேசிய குருதி வங்கி.. இடம்பெற்றுள்ள பாரிய நிதிமோசடி
தேசிய குருதி வங்கியில் மென்பொருள் கொள்வனவு என்ற பேரில் சுமார் 88 லட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய குருதிமாற்று மையத்திடம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நோயாளிகளுக்கு எவ்வளவு இரத்தம் வழங்கப்பட்டது என்பதை அறிய தரவுத்தளமொன்று இருக்கவில்லை.
இதன் காரணமாக, கொடையாளர்களிடமிருந்து எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி சேகரிக்கப்பட்ட குருதி 45 நாட்களில் காலாவதியான பிறகு, அதிக அளவு குருதி வீணாக்கப்பட்டது.
அதன்போது இருவகையான கடுமையான குற்றங்கள் அதில் உள்ளடங்கியிருந்தன. முதலாவது, நன்னோக்குடன் கொடையாளர்களால் வழங்கப்பட்ட இரத்தம் காலாவதியாகிவிட்டது என்ற காரணத்திற்காக, அதை அறியாமலேயே வீணாக்கியது.
புதிய கணினி மென்பொருள்
இரண்டாவது, கொடையாளர்களிடமிருந்து இரத்தம் சேகரிக்கப்பட்ட தருணத்திலிருந்தே, அதை நோயாளிக்குக் கொடுப்பதற்கு ஏற்றதாக மாற்றுவதற்காக பொட்டலமிட்டு, அதைப் பாதுகாப்பதற்காக பெரும் பணம் செலவழிக்கப்பட்டு, பின்னர் 45 நாட்களில் காலாவதியாகி விட்டது என்ற காரணத்திற்காக வீணாக்கப்பட்டது.

மேற்கண்ட குற்றவியல் சூழ்நிலையைப் புரிந்து கொண்ட மருத்துவர் புஷ்பிக டி சில்வா என்ற இளம் மருத்துவர், பல ஆண்டுகளாகக் கடினமாக உழைத்து, மேற்கூறிய ஏறக்குறைய அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் ஒரு புதிய கணினி மென்பொருள் அமைப்பை உருவாக்கியிருந்தார்.
அந்த இளம் மருத்துவர், தனது புலமைசார் சொத்துரிமைகளைக் கூடப் பாதுகாக்காமல், அந்த மென்பொருள் அமைப்பை தேசிய குருதிமாற்று மையத்திற்கு இலவசமாக நன்கொடையாக வழங்கியுள்ளார்.
மேற்கண்ட மென்பொருள் அமைப்பை உருவாக்குவதற்கு முன்பு, மருத்துவர்புஷ்பிக ஒரு டச்சு கடன் உதவித் திட்டத்தின் கீழ் அத்தகைய மென்பொருள் அமைப்பை உருவாக்க மற்றொரு நிறுவனத்திற்குப் பணம் செலுத்தியிருந்தார்.
ஆனால் அந்த மென்பொருள் அமைப்பு உருவாக்கம் முடிக்கப்படாமலேயே கைவிடப்பட்டுள்ளது. அதற்காக யாருக்குப் பணம் கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? என்பன குறித்து இதுவரை விசாரணைகள் நடத்தப்படவில்லை.
தொடர்ச்சியான சேவை
இதற்கிடையே மருத்துவர் புஷ்பிகவின் மென்பொருள் கண்டுபிடிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டு உலக இரத்த தான தினத்தில் பிரதமர் ஊடாக மருத்துவர் புஷ்பிகவுக்கு ஒரு விருதும் வழங்கப்பட்டது.

அன்று முதல், மருத்துவர் புஷ்பிக டி சில்வாவால் உருவாக்கப்பட்ட மென்பொருள் அமைப்பு, இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள இரத்த மையங்களுடன் ஒருங்கிணைந்து, தேவைக்கேற்ப இரத்த தானங்களைப் பெற்று வருகிறது. அது பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியான சேவையை வழங்கி வருகிறது.
இவ்வாறான பின்னணியில் மருத்துவர் புஷ்பிகவால் உருவாக்கப்பட்டு, இன்றும் எந்தப் பிரச்சனையும் இன்றி இயங்கிக்கொண்டிருக்கும் மென்பொருள் அமைப்பிற்கு ஏதேனும் மேம்படுத்தல் தேவைப்பட்டால், அதனை மருத்துவர் புஷ்பிகவே செய்து பராமரிப்பதற்குப் பதிலாக, தற்போதுள்ள மென்பொருள் அமைப்பை ஒரு தனியார் நிறுவனம் மூலம் மீண்டும் கொள்வனவு செய்வதற்கு தேசிய குருதிமாற்று மைய நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதற்காக பொதுமக்களின் வரிப்பணம் சுமார் 88 லட்சம் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த மோசடி குறித்து சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆபத்தான நபரை விடுவிக்க 500 கோடி ரூபா பேரம்! மகிந்தவின் நெருங்கிய நண்பருடன் டீல் - சிக்கப்போகும் அரசியல்வாதிகள்