விமான நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரவின் பணிப்புரை
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த மீளாய்வு கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது துறைமுக மற்றும் விமான போக்குவரத்துத் துறைகளை நவீனமயமாக்கல் மற்றும் நிதி முகாமைத்துவம் குறித்து ஜனாதிபதி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
நவீனமயமாக்கல் பணிகள்
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் இலங்கை துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள், காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்பு, கொழும்பு துறைமுக லொஜிஸ்டிக் பார்க் மற்றும் மேற்கு முனையத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்து ஆராயப்பட்டது.
துறைமுக சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் செயல்திறனை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டது. 2055ஆம் ஆண்டளவில் வருடாந்த பயணிகள் கொள்ளளவை 24.2 மில்லியனாக உயர்த்தும் நோக்கில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்தும் இரண்டாம் கட்டப் பணிகள் 2027ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்யப்படவுள்ளன.

புதிய முனையங்களை அமைத்தல் மற்றும் போக்குவரத்துச் சேவைகளை முறைப்படுத்துதல் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. ஹிகுராக்கொட உள்ளிட்ட உள்நாட்டு விமான நிலையங்களைச் சீரமைக்க, விமானப்படையுடன் இணைந்து கூட்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
மத்தல விமான நிலையம் ஆண்டுக்கு சுமார் 4 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொள்வதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த நட்டத்தைத் தவிர்க்க, புதிய முதலீட்டு முன்மொழிவுகளைக் கோரியுள்ளதாகவும், 2027ஆம் ஆண்டளவில் அதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண விமான நிலைய முனைய நவீனமயமாக்கல் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.
நிறுவனங்கள் தங்களின் சொந்த நிதி வலிமையைப் பயன்படுத்தி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, மக்களின் வரிப்பணத்திற்குச் சுமையாக அமையாத வகையில், திறைசேரிக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்குத் தெளிவாக அறிவுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில் இலங்கை துறைமுக அதிகார சபை, ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் உள்ளிட்ட அமைச்சின் கீழ் உள்ள அனைத்து முக்கிய நிறுவனங்களின் பிரதானிகளும் கலந்துகொண்டனர்.







உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan